திருப்பரங்குன்றம் விவகாரம்: சேகர்பாபு vs வானதி சீனிவாசன்

1920-ல் மதுரை சார்பு நீதிமன்றமும், 1930-ல் லண்டன் பிரிவி கவுன்சிலும் திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.
திருப்பரங்குன்றம் விவகாரம்: சேகர்பாபு vs வானதி சீனிவாசன்
2 min read

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்த குற்றச்சாட்டிற்கு எதிர்வினையாற்றியுள்ளார் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவை முன்வைத்து நடந்து வரும் விவகாரத்தில் நேற்றைய (ஜன.5) தினம் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணியினர் முடிவு செய்தார்கள். ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, கோயிலுக்கு முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பலரையும் கைது செய்தது.

இதனை அடுத்து இந்த விவகாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இந்து முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா அமர்வு பழங்காநத்தம் பகுதியில் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணிக்கு அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து மாலையில் பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணியினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் இன்று (ஜன.5) செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது,

`போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தயவு செய்து இந்து அமைப்பினர் என்று நீங்கள் குறிப்பிடவேண்டாம். இந்த போராட்டத்தில் முழுக்க முழுக்க ஈடுபட்டவர்கள் பாஜகவினர் என்று குற்றம்சாட்ட விரும்புகிறேன். இந்த ஆட்சிக்கு ஆபத்தை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நேற்றைய போராட்டம் தேவையற்றது.

திருப்பரங்குன்றம் கோயிலில் நேற்று ஒரு பெரிய கூட்டத்தைக் கூட்டி, அங்கு மதவாதம், இனவாதம், மொழிவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரச்னைகளை ஏற்படுத்த நினைத்தார்கள். வட மாநிலங்களில் வேண்டுமென்றால் இதற்கான சாத்தியக் கூறுகள் அமையக்கூடும். இந்த பெரியார் மண்ணில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற ஒரு காலமும் அனுமதிக்கமுடியாது.

1920-ல் மதுரை சார்பு நீதிமன்றமும், 1930-ல் லண்டன் பிரிவி கவுன்சிலும் திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. இதனைத் தொடர்ந்து 1958, 1975, 2004, 2017 மற்றும் 2021 எனப் பல்வேறு காலகட்டங்களில் நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளன.

தற்போது கூட இது தொடர்பாக 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவுகளைப் பின்பற்றியே அரசு நடந்துகொள்கிறது’ என்றார்.

இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபுவின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோவையில் கூறியதாவது,

`திருப்பரங்குன்றம் கோயில் மலையின் புனிதத்தன்மையை சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒரு சில நபர்கள் கெடுக்க நினைக்கிறார்கள். திட்டமிட்டு மத மோதலை உருவாக்க நினைக்கிறார்கள். இதற்காக அப்பகுதியில் இருக்கும் அனைத்து சமுதாயத்தினரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அங்கு போராடுவது இந்து அமைப்புகள் இல்லை பாஜக என்றால், இந்துக்களுக்காக குரல் கொடுக்க பாஜக முன்வருகிறது. இதை அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். பல்வேறு கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்ததாக அமைச்சர் கூறுகிறார், ஆனால் திட்டமிட்ட ரீதியில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஏன் இரட்டை வேடம் போடுகிறீர்கள்?

பொதுமக்கள் ஜனநாயக ரீதியாக கருத்து தெரிவிக்க வேண்டுமென்றால் நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெறவேண்டிய நிலைதான் உள்ளது. பிறகு எப்படி இது சமூக நீதி மற்றும் திராவிட மாடல் அரசாகும்? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து மக்களையும், இந்து சமய உணர்வுள்ளவர்களையும் திமுக அரசு ஏமாற்றுகிறது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in