திருப்பரங்குன்றத்தில் அரசின் நடவடிக்கையை ஆன்மிகவாதிகள் ஆதரிக்கிறார்கள்: அமைச்சர் சேகர் பாபு | Sekar Babu |

கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பாஜகவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது அதிமுக...
அமைச்சர் சேகர் பாபு (கோப்புப்படம்)
அமைச்சர் சேகர் பாபு (கோப்புப்படம்)படம்: https://twitter.com/PKSekarbabu
1 min read

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகளை சங்கிகளைத் தவிர ஆன்மிகவாதிகள் அனைவரும் ஆதரித்து வருகிறார்கள் என்று அமைச்சர் சேகர் பாபு பேசியுள்ளார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுதல் தொடர்பான விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை ஆன்மிகவாதிகள் ஆதரிக்கிறார்கள் என்று அமைச்சர் சேகர் பாபு பேசியுள்ளார். சென்னை எழும்பூரில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“திமுக அரசு சட்டத்தை மதிப்பது. பக்தர்கள் நலன் காப்பது. அனைவரும் சமம் என்றும் அனைவரும் ஒருதாய் மக்களாக வாழ வேண்டும் என்று நினைக்கும் அரசு. அந்த வகையில்தான் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு என்ன உத்தரவிட்டதோ, அதைச் செயல்படுத்தி, சட்டத்தின் ஆட்சியை நடத்துகின்ற அரசாக திமுக அரசு இருக்கிறது. சட்டத்திற்குச் சிறிதும் களங்கம் ஏற்படாமல் சட்டப் பாதுகாப்பு வழங்க முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதனைச் சங்கிகளைத் தவிர மற்ற அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். குறிப்பாக உலக கோயில்கள் பலவற்றின் குடமுழுக்குக்கு நாள் குறித்துக் கொடுக்கும் ராஜா பட்டர், பிச்சை குருக்கள், செல்வம் பட்டர் உட்பட ஆன்மிகவாதிகளும் இறை அன்பர்களும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதனால்தான் இது மக்களின் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் மக்களாட்சியாக இருக்கிறது.

ஜெயலலிதா இருந்த வரை அதிமுக சுயசிந்தனையோடு கட்சி முடிவுகளை எடுத்து வந்தது. இப்போது தில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ன சொல்கிறாரோ அதற்கேற்ற நிலைப்பாடுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது கொள்கைகளையும் லட்சியங்களையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டார்கள். 2014 மற்றும் 2017-ல் அதிமுக ஆட்சியில் இருந்தபோது திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்து நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்கள். ஆனால் இன்று அதை மறந்துவிட்டு தீபம் ஏற்ற அரசு அனுமதிக்க வேண்டும் என்று அறிக்கை விடுவது போலித்தனமானது. தங்களது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பாஜகவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார்கள் என்பது இந்த அறிக்கையிலிருந்து புலப்படுகிறது” என்றார்.

Summary

Minister Shekhar Babu has said that all spiritualists, except the Sanghis, are supporting the government's actions in the Thiruparankundram issue.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in