
கச்சத்தீவை மீட்கக் கடிதம் எழுதுகிறேன் என்பது கேடுகெட்ட நாடகம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
“இலங்கை பிரதமருடன் இந்தியப் பிரதமர் இரு நாட்டு நலன் சார்ந்து பேசிய ஏதேனும் ஒரு தகவலைச் சொல்ல முடியுமா? இதற்கு முன்னர் இருந்த பிரதமரும் அதிபரும் வந்து மோடியைச் சந்திக்கவில்லையா? குஜராத்தில் ஒரு மீனவரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்தபோது இந்திய கடற்படை விரட்டிச் சென்று மீட்டுக் கொண்டுவந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களைக் கைது செய்யும்போது ஏன் அதையே கடற்படை செய்யவில்லை? இப்போது முதல்வர் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். தொலைப்பேசியில் அழைத்துப் பேசலாம். 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அவர்களை வைத்துப் பேசலாம். பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரை வாழ்த்திப் பேரணி நடத்திய முதல்வர், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பெரிய மாநாடு போட்டு வலியுறுத்த முடியாதா? பேரணி நடத்த முடியாதா? இது கேடுகெட்ட நாடகம்.
கச்சத்தீவை அவர்கள் ஆட்சியில்தானே கொடுத்தார்கள். அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? எடுத்துக் கொடுத்த கட்சியுடன் தானே கூட்டணியில் உள்ளார்கள். எத்தனை காலத்திற்கு இந்த நாடகத்தை அரங்கேற்றுவார்கள்? கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள் என்று கடிதம் எழுதிவிட்டதாகச் சொல்கிறார் அவர் முதல்வரா அஞ்சல் அலுவலரா?
எடப்பாடி பழனிசாமி ஐயாவிடம் திராவிடம் என்றால் என்ன என்று விளக்கிப் பேசச் சொல்லுங்கள். முதல்வர் ஸ்டாலினிடம் விளக்கம் கேளுங்கள். ”திராவிடம் என்றால் என்னவென்று கேட்பவர்களே! இந்தக் கல்யாணம்தான் திராவிடம்” என்று பேசுகிறார் முதல்வர். கல்யாணம்தான் திராவிடமா? இனம் என்கிறார்கள், நிலம் என்கிறார்கள், ஆரியத்திற்கு எதிரானதுதான் திராவிடம் என்கிறார்கள். அவர்களே குழம்பிப் போயுள்ளார்கள். திராவிடம் என்றால் என்ன என்று முதலில் ஒரு முடிவுக்கு வரச் சொல்லுங்கள். நான் சொல்லட்டுமா? தமிழர் அல்லாதோர் பாதுகாப்பாக வாழ்வதற்கும் ஆள்வதற்கும் வசதியாகக் கொண்டுவரப்பட்ட ஒன்றுதான் திராவிடம்.
துணை முதல்வர் உதயநிதி செங்கலைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றியதுபோல் எடப்பாடி பழனிசாமி அல்வாவைத் தூக்கிக் கொண்டு சுற்றுகிறார். எய்மஸ் மருத்துவமனை என்று 15 ஆண்டுகளாக ஒரே ஒரு செங்கல்தான் ஊன்றப்பட்டு இருந்தது. அதையும் உதயநிதி திருடிக் கொண்டு போய்விட்டார். தான் ஆட்சிக்கு வந்தால் அல்வாதான் கொடுப்பேன் என்று இபிஎஸ் அல்வா காட்டுகிறார்” என்றார்.