
48-வது சென்னைப் புத்தகக் காட்சியில் பங்கேற்று, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியவை சர்ச்சையான நிலையில், அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது பபாசி நிர்வாகம்.
இயக்குநரும், எழுத்தாளருமான பாலமுரளிவர்மன் தொகுத்து, டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்த `தமிழ்த் தேசியம் ஏன்? ஏதற்கு? எப்படி?’ என்கிற நூலின் வெளியீட்டு விழா கடந்த ஜன.4 காலை 11 மணி அளவில் 48-வது சென்னை புத்தகக் காட்சியின் வெளி அரங்கில் நடைபெற்றது.
இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சீமான், திராவிடத்தையும், தமிழ் தேசியத்தை ஒப்பிட்டு பேசியதுடன், ஆளுங்கட்சியையும் முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் கடுமையாக விமர்சித்தார். அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்தும் பேசினார்.
புத்தகக் காட்சி மேடையை அரசியல் மேடையாக சீமான் பயன்படுத்திவிட்டதாக இந்த நிகழ்வுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் வேடியப்பன் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, பபாசி நிர்வாகத்தனர் கூட்டாக இன்று (ஜன.6) காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தனர். பபாசி தலைவர் சொக்கலிங்கம் பேசியவை பின்வருமாறு,
`சீமான் மேடை ஏறுவதற்கு முன்பு இது அரசியல் மேடை அல்ல இலக்கிய மேடை, புத்தகங்கள் தொடர்பாக மட்டும் பேசுங்கள் என அறிவுறுத்தினேன். சீமானின் பேச்சுக்கு பபாசி கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது. நீங்கள் அழைத்துவரும் நபர்கள் அரசியல் பேசக்கூடாது என பதிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பபாசி பொதுச்செயலாளர் முருகன் அளித்த பேட்டி பின்வருமாறு,
`சிறப்பு விருந்தினராக வந்த சீமான், புத்தகம் பற்றி மட்டுமே பேசியிருக்கவேண்டும். புத்தகக் காட்சிஒ பாதைக்கு நாங்கள் யார் பெயரை வேண்டுமானாலும் வைப்போம். இந்த விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகமும் உரிய மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த பதிப்பகம் திட்டமிட்டு இதனை நடத்தியுள்ளது’ என்றார்.