திமுக கூட்டணியில் இருந்துகொண்டு மது ஒழிப்புப் பற்றி பேசி என்ன பயன் என திருமாவளவனுக்கு சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்வணக்கம் செலுத்தினார். இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு குறித்து கருத்து தெரிவித்தார்.
"மது ஒழிப்புக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் ஓர் அணியில் இருக்க வேண்டும் என திருமாவளவன் கூறியது அவருடைய கருத்து. எனக்கு இதில் மாறுபட்ட கருத்து உள்ளது. மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருமாவளவன். அதிமுக ஆட்சியில் மது இருந்ததா இல்லையா? தற்போது அழைத்தால் மட்டும் என்ன நடக்கும்? மது ஒழிப்புக் கொள்கையை ஏற்று, மதுவை ஒழிக்கிறோம் டாஸ்மாக்கை மூடுகிறோம் என யார் அறிவிப்பு செய்கிறார்களோ அவர்களுடன் தேர்தல் உடன்பாடு என்று கூறினால் அது போராட்டம். அப்படி இல்லாதபட்சத்தில் இன்று போராடினால், நாளை அவர்கள் திறக்கதானே செய்வார்கள்.
ஒரே அணியில் மதுவுக்கு எதிரான கொள்கையை வைத்து தேர்தலை எதிர்கொள்வோமா? இதற்கு சம்மதம் என்றால், அந்தக் கூட்டணியில் இணைய நான் தயார்.
திருமாவளவனின் கருத்து சரி. இதை யாருடன் இருந்துகொண்டு செய்வது என்பதுதான் கேள்வி. டாஸ்மாக்கில் விற்பனை குறைந்தால், விற்பனை செய்பவர்களை இடைக்காலப் பணிநீக்கம் செய்த அரசு இது.
கூட்டணியில் இருந்துகொண்டு பேசி என்ன பயன் உள்ளது? சாராய ஆலை வைத்திருப்பவர்கள் யார்? சாராயக் கடையில் விற்பனை குறைந்தால், அதை ஆய்வு செய்வது எந்த ஆட்சி? அந்த ஆட்சியுடன் கூட்டணியில் இருந்துகொண்டு எப்படி பேச முடியும்" என்றார் சீமான்.
கள்ளக்குறிச்சியில் விசிக மகளிரணி சார்பில் அக்டோபர் 2 அன்று மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க அதிமுக, தவெக தலைவர் விஜய் ஆகியோருக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.