அன்புத் தளபதி விஜய்: கல்வி விருது விழாவுக்கு சீமான் வாழ்த்து

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இருவரும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பேச்சுகள் அடிபட்டு வரும் சூழலில் சீமான் வாழ்த்து.
கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: https://twitter.com/NaamTamilarOrg

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் கல்வி விருது விழாவுக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுக்க 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசளித்து கௌரவிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. முதற்கட்டமாக 21 மாவட்டங்களில் 800 மாணவர்களுக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று விருதுகளை வழங்கி மாணவ, மாணவிகளைக் கௌரவித்தார். விஜயின் இந்தச் செயல்பாட்டுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை!

ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது;

‘பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச் சான்றிதழுடன், உயர் கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!" என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மாற்று அரசியலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கியுள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இருவரும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

இந்த நிலையில், விஜயின் கல்வி விருது விழா நிகழ்ச்சிக்கு சீமான் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in