
நடிகர் விஜய் தயாரித்துக் கொடுக்கப்பட்ட 10 நிமிடப் பேச்சை பேசுவதற்கே ஒரு வாரம் முழுவதும் பயிற்சி எடுக்க வேண்டும் என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை (செப். 13) தனது முதல் பிரசாரத்தைத் திருச்சியில் தொடங்குகிறார். அவருக்கு பல்வேறு நிபந்தனைகளைக் காவல்துறை விதித்துள்ளது. அதன்படி ஒரு இடத்தில் 20 நிமிடம் மட்டுமே பேச வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய்யின் பிரசாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘எது நமக்கான அரசியல்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது அவர் விஜய் போல நடித்துக் காட்டிப் பேசினார்.
நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது :
கொள்கைத் தலைவர்களாக விஜய் வைத்துள்ள காமராஜரைப் பற்றியோ, வேலுநாச்சியாரைப் பற்றியோ 10 நிமிடங்கள் பேச முடியுமா? திருச்சியில் பேசுவதற்கே விஜய் தரப்பில் 15 நிமிடங்கள்தான் கேட்கப்பட்டுள்ளது. காவல்துறைதான் கூடுதலாக 5 நிமிடம் பேசுங்கள் எனக்கூறி 20 நிமிடப் பரப்புரைக்கு அனுமதி அளித்திருக்கிறது.
விஜய் 10 நிமிடம் தயாரிக்கப்பட்ட பேச்சுக்கே சனிக்கிழமை வரை மனப்பாடம் செய்ய வேண்டி இருக்கிறது. நடித்துப் பார்த்துவிட்டு வந்து பேச வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் அதை பிக்பாஸ் போல் மக்கள் பார்ப்பார்கள். இதில் வேடிக்கை காட்ட வரும் சிங்கமாக இருந்துகொண்டு வேட்டைக்குத்தான் வெளியே வருவோம் என்ற வசனம் எதற்கு?
அவர் பேசுவதை யாராவது அமர்ந்து கேட்கிறார்களா? அவரது ரசிகர்களே படத்தின் முதல் நாள் காட்சி போலக் கூச்சலுடன் தான் கேட்கிறார்கள். ஒரு கட்சியை ஒழிப்பதே கொள்கையாக இருக்க முடியுமா? ஒழித்த பின் என்ன செய்வீர்கள்? முதலமைச்சர் ஆவது லட்சியமல்ல. முதலமைச்சர் ஆன பின்பு என்ன செய்கிறோம் என்பதே இலக்கு லட்சியம்” இவ்வாறு பேசினார்.
Vijay | Seeman | TVK | NTK | TN Politics |