கல்வியில் சிறந்த தமிழ்நாடு... இசை வெளியீட்டு விழா போல் இருந்தது: சீமான் விமர்சனம் | Seeman |

கல்வியில் சிறந்த தமிழ்நாடு... இசை வெளியீட்டு விழா போல் இருந்தது: சீமான் விமர்சனம் | Seeman |

திராவிட மாடல் கிடையாது... விளம்பர மாடல் என்றும் சாடல்...
Published on

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி படத்தின் இசை வெளியீட்டு விழா போல் நடந்தது என்று விமர்சித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இது திராவிட மாடல் கிடையாது, விளம்பர மாடல் என்று கடுமையாகச் சாடினார்.

சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்:-

”கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் எத்தனை கல்வியில் சிறந்த பேரறிஞர்கள் எத்தனைபேர் பங்கேற்றார்கள்? கல்வித்துறையைச் சார்ந்த ஜவஹர் நேசனைப் பேச வைத்திருக்கலாம். பிரின்ஸ் கஜேந்திர பாபு என்ற அறிஞர் இருக்கிறார். அவரைப் பேச வைத்திருக்கலாம். பள்ளி ஆண்டு விழாவில் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் போல் வேடம் போட்டு வருவார்களே அப்படி நாடகம் ஆடுகிறார்கள். அது இசை வெளியீட்டு விழா போல் நடந்திருக்கிறது. அது திராவிட மாடல் கிடையாது. விளம்பர மாடல். அவர்களே மாடல் என்று சொல்லிவிட்டார்கள். செய்தி அரசியல், விளம்பர அரசியலைத் தவிற அவர்களுக்கு வேறு என்ன தெரியும்? 2000-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மூடிவிட்டார்கள். கழிவறையை விட அரசுப் பள்ளிகள் கேவலமாக உள்ளன. கல்வியை முதலாளிகளின் லாபம் ஈட்ட கடையாக திறந்து விட்டுட்டு, கல்வியில சிறந்த தமிழ்நாடு என்றால், எதில் சிறந்திருக்கிறது?

தமிழ்நாட்டில் பட்டம் படித்துவிட்டு வெளியில் வரும் மாணவருக்கு தாய் மொழியில் எழுதப் படிக்கத் தெரியவில்லை. என்ன சிறப்பைக் கல்வியில் அடைந்துவிட்டீர்கள்? ஒரு பாடம் படிக்கவேண்டும் என்றால் அவ்வளவு பணம் கற்க வேண்டும். லாபம் ஈட்டும் முதலாளிகளின் சந்தையாக ஆக்கி வைத்துவிட்டு, கல்வியில் சிறந்ததாகச் சொல்கிறார்கள். அதில் பார்த்தால் எல்லா நாளும் சாம்பார்தானாம். அது ஒரு உப்புமா கம்பெனி. இவர்களைப் போய் காலை உணவு போட்டார்கள், சமூக நீதியைக் காத்தார்கள் என்கிறீர்கள். சமூக நீதி கட்டடத்தின் பெயரில்தான் இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட ஆதித் தமிழ்ப் பிள்ளைகள் அமர்ந்து படிக்கும் கட்டடத்திற்குப் பெயர் மட்டும் சமூக நீதி. சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டும் என்றால் சமமாக அல்லவா அமர வைக்க வேண்டும். இது சமூக நீதியா? சமுக்காள நீதியா? கல்வியைப் பற்றி கல்வியில் சிறந்த மகான்கள் பேசியிருக்கிறார்கள். நாம் கேட்டுக்கொள்ள வேண்டியது தான். அதில் ஒருவர் இளையராஜா படித்தாரா, ஏ.ஆர். ரஹ்மான் படித்தாரா, சச்சின் படித்தாரா? அப்படியெல்லாம் சொல்பவர்களை நம்பாதீர்கள் என்கிறார். படத்தை எடுத்துவிட்டால் அவர் கல்வி அறிஞன் என்று நினைத்துக் கொண்டு கருத்து சொல்ல வந்துவிட வேண்டியது. தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நான் சொன்னேன். நான் என்ன சொன்னேன் என்று முழுவதுமாகக் கேட்பதில்லை. ஏதோ அரைகுறை கருத்தைச் சொல்லி மேடையில் கைத்தட்டு வாங்கிவிட வேண்டும்.

சரி, முதலமைச்சர், துணை முதலமைச்சரின் கல்வித் தகுதி என்ன? பிரதமர் மோடியின் கல்வித் தகுதி என்ன? அவராக எம்.ஏ என்று போட்டுக்கொண்டார். அதனால்தான் நாடாளுமன்றத்தில் மஹுவா மொய்த்ரா உங்கள் கல்விச் சான்றிதழை வெளியிடுங்கள் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார். அதை வெளியிட வேண்டியதுதானே. துணை முதல்வர் உதயநிதியே சொல்கிறார், என்னுடன் படித்தவர் வழக்கறிஞர் ஆகிவிட்டார் என்று. படித்ததனால் வழக்கறிஞர் ஆகிவிட்டார். படிக்காததால் துணை முதல்வர் ஆகிவிட்டீர்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு, புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு. கொண்டாடுவோம். அவ்வளவுதான் சொல்ல முடியும்.”

இவ்வாறு பேசினார்.

logo
Kizhakku News
kizhakkunews.in