
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மை, ஆனால் அவருக்குப் புகைப்படம் வழங்கப்படவில்லை என்று எல்டிடிஇ பொறுப்பாளர் தமிழ்வேந்தன் என்ற நபரின் பெயரில் அறிக்கை வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலியானது எனவும், அதைப் பல வருடங்களுக்கு முன்பு தாம் உருவாக்கியதாகவும் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சமீபத்தில் தனியார் செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கும் வகையில் எல்டிடிஇ பொறுப்பாளர் தமிழ்வேந்தன் என்பவரின் பெயரில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
`பூகோள ரீதியிலான அரசியல் கண்ணோட்டத்தோடு எங்கள் அண்டை நாடான இந்தியாவை இன்று வரை நேசக்கரம் கூப்பி அனுசரித்து எங்கள் போராட்டத்தின் நியாயங்களை வலியுறுத்தி வருகிறோம். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எங்கள் இயக்கத்தின் மாவீரர்கள் தியாகத்தையும், எங்கள் நோக்கத்தையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.
தனிநபர் சுயநலத்திற்காகவும், தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காகவும் எங்கள் விடுதலைப் போராட்டத்தையும், தேசியத் தலைவர் பிரபாகரனையும் முன்னிறுத்தி செய்யப்படும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
ஈழத் தமிழ் மக்களின் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது வேறு, இந்தியத் தமிழர்களின் தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது வேறு. தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு எதிராக எதிர்வினையாற்றவோ, கருத்து தெரிவிக்கவோ விரும்பவில்லை. இது எங்கள் தேசியத் தலைவரின் நிலைப்பாடு அல்ல.
தேசியத் தலைவரை சீமான் சந்தித்தது உண்மை, ஆனால் புகைப்படங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும், பயிற்சிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும் அன்பார்ந்த மக்களுக்கு நாங்கள் தெளிவூட்ட விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் சர்ச்சையான கருத்துகள் மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.
இது நமது விடுதலைப் போராட்டத்தையும், மாவீரர்களையும், தேசியத் தலைவரையும் இழிவுபடுத்துகிற, கொச்சைபடுத்துகிற செயல் என்பதை உலகத்தில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களும் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.