தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விஜய் செப்டம்பர் 22-ல் கூட்டியிருப்பதாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் கடந்த 22 அன்று கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து, கொடிப் பாடலையும் வெளியிட்டார். இந்த மேடையில் விஜயின் அரசியல் பேச்சுக்காக அனைவரும் காத்திருந்தபோது, அவர் பெரிதளவில் எதுவும் பேசாமல் தவிர்த்துவிட்டார். இதனிடையே, விஜயின் கட்சிக் கொடி மீது விமர்சனங்கள் எழுந்தன. அசாம், சிக்கிம் மாநிலங்கள் தவிர்த்து யானை சின்னத்தை எந்தவொரு அரசியல் கட்சியும் எந்தவொரு வடிவிலும் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆனந்தன் தெரிவித்தார்.
இந்த நிலையில் திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் விஜய்-க்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
"விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்ததை வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். கொடியில் இருக்கும் நிறம்தான் பிரச்னை.
மஞ்சள், சிவப்பு நிறத்தை முதன்முதலாக விஜய்தான் கொண்டு வந்ததைப்போல பேசுகிறார்கள். எங்களுடையக் கட்சிக் கொடியும் சிவப்பு, மஞ்சள்தான். நாட்டில் நிறைய கொடிகள் சிவப்பு, மஞ்சள் நிறத்தில் உள்ளன. நிறம் என்பது அனைவருக்கும் பொதுவானது. யானை என்பதும் அனைவருக்கும் பொதுவானது. விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக இதெல்லாம் பேசப்படுகிறது. விஜய் புதிதாக வந்திருப்பதால் அவரை விமர்சித்து பேசுகிறார்கள். விஜய்க்கு ஆதரவாகப் பேச நான் இருக்கிறேன். எனக்கு ஆதரவாப் பேச தான் யாரும் இல்லை.
செப்டம்பர் 22 அன்று விஜய் மாநாடு நடத்துகிறார். அப்போது, சீமானுடன் கூட்டணி குறித்த கேள்வியை அவரிடம் முன்வையுங்கள்" என்றார் சீமான்.