கோப்புப்படம்
கோப்புப்படம்

கருணாநிதி குறித்த பாடலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது: சீமான்

"அந்தப் பாடலுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்தப் பாடலை இயற்றி, மெட்டு அமைத்து வெளியிட்டது அதிமுக."
Published on

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடலைப் பாடியதற்காக கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சாட்டை துரைமுருகன் வழக்கு குறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது:

"இரு நாள்களுக்கு முன்பு சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு குறித்து விளக்கம் கொடுக்க விரும்பினேன்.

துரைமுருகனுக்கு அந்தப் பாடல் குறித்து தெரியாது. நான் பாடிதான் அந்தப் பாடலை அவர் கேட்டுள்ளார். அந்தப் பாடலுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்தப் பாடலை இயற்றி, மெட்டு அமைத்து வெளியிட்டது அதிமுக. ஜெயலலிதா இருந்தபோது பல்வேறு மேடைகளில் அந்தப் பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது. இதே கருத்து சொல்லப்பட்டுள்ளது. அன்றைக்கெல்லாம் இவர்களுக்கு வருத்தமோ, கோபமோ, இழிவோ தெரியவில்லை.

இதை நாங்கள் திருப்பி எடுத்துப் பாடும்போதுதான் இவர்களுக்குப் பிரச்னை. அவதூறு பேசுவது, அசிங்கமாகப் பேசுவது இதற்கெல்லாம் ஆதித் தாய் திமுகதான். ஒவ்வொரு தலைவர்களைப் பற்றியும் கருணாநிதி பேசிய வரலாறே உள்ளது.

இழிவாகப் பேசுவதற்கு பேச்சாளர்கள் வைத்துள்ள கட்சி திமுக. திமுகவில் உள்ள சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் மாற்றுக் கட்சியிலுள்ள பெண்களைப் பற்றி பேசுவதையெல்லாம் கேட்டுப் பார்த்தால் தெரியும்.

நாகரிக அரசியலைப் பற்றி அடுத்தவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கான நேர்மையும், தகுதியும் துளியும் இல்லாத கட்சி திமுக.

இந்தப் பாடலை சண்டாளர் என்று சொல்லிவிட்டதாக விமர்சிக்கிறார்கள். சண்டாளர் என்று ஒரு சமூகம் இருப்பது பற்றி எங்களுக்குத் தெரியாது. சண்டாளர் என்பது பாடல்களில் வந்துள்ளன. பாஞ்சாலங்குறிச்சி படத்தில் வடிவேலுவைக் கொண்டு நகைச்சுவைக் காட்சியில் சண்டாளன் எனப் பேச வைத்தது தொடர்பாக எனக்குக் கடிதம் வந்தது. அப்போதுதான் இந்தப் பெயரில் ஒரு சமூகம் இருப்பது பற்றி எனக்குத் தெரிய வந்தது. இதன்பிறகு, சண்டாளன் என்பதைப் பயன்படுத்துவதில்லை.

திமுகவினர்தான் இந்த சொல்லை அதிகளவில் பயன்படுத்தியிருக்கிறார்கள். சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராக அதிமுக கருத்து சொன்னபோது, முதல்வராக இருந்த கருணாநிதி, சண்டாளத்தனத்தை தமிழகம் இனியும் பொறுத்துக்கொள்ளாது என்று பயன்படுத்தியிருக்கிறார். எந்தச் சண்டாளர்கள் இதைக் கெடுத்தது என்றும் கருணாநிதியே எழுதியிருக்கிறார். கந்த சஷ்டி கவசத்திலும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை எழுதியவர் மீது தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய வேண்டும்.

திடீரென்று எங்களுடைய சாதி வந்துவிட்டது என்பது அர்த்தமற்றது. மற்றவர்கள் இழிவுபடுத்தியபோது வராத வலி, திடீரென்று தற்போது வருகிறதா? ஏற்கெனவே இருக்கிற பாடலைப் பாடினோம். நான் பாடவில்லை, துரைமுருகனும் பாடலைப் பாடவில்லை. எழுதி பாடியது அதிமுக. அப்போதெல்லாம் இதைக் கவனத்தில்கொள்ளாதது ஏன்?

உங்களுக்கு வாக்குச் செலுத்தி ஆள வைத்த மக்களுக்குச் செய்த துரோகங்களைப் பட்டியலிட்டு விவாதிக்கலாமா?" என்றார் சீமான்.

logo
Kizhakku News
kizhakkunews.in