
சென்னையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சீமான் உள்ளிட்ட நாதகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, வள்ளுவர் கோட்டத்தில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிகோரி சென்னை காவல் ஆணையரகத்தில் நாதக சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாதக ஆர்ப்பாட்டத்திற்குக் காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
இதைத் தொடர்ந்து, கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தும் வகையில் இன்று (டிச.31) காலை தொடங்கி வள்ளுவர் கோட்டத்தில் குழும ஆரம்பித்த நாதகவினரைக் கைது செய்தனர் காவல்துறையினர். இந்நிலையில், காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் வகையில் வள்ளுவர் கோட்டம் பகுதிக்கு வந்தார் சீமான். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு,
`அனுமதி மறுக்கக் காரணம் என்ன? இது மக்கள் அதிகமாகக் கூடும் பகுதி, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறுகிறார்கள். இந்த இடத்தில் நாங்கள் ஒன்றும் புதிதாகப் போராட வரவில்லை., பலமுறை இங்கே போராடியிருக்கிறோம். இதுவரைக்கும் ஏற்பட்ட நெரிசல் என்ன? அதனால் ஏற்பட்ட இடையூறு என்ன?’ என்றார்.
இதைத் தொடர்ந்து சீமானைக் கைது செய்து காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். சீமான் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட நாதகவினரை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் காவல்துறையினர் அடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.