`வேர்களைத் தேடி’ பயணத்தைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்

தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்
`வேர்களைத் தேடி’ பயணத்தைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்
1 min read

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 1) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழநாட்டின் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் `வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான தமிழக சுற்றுப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் சுருக்கம் பின்வருமாறு:

`புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களைத் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பைப் புதுப்பிக்கும் வகையிலும், தமிழ் கலை பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும், அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான கலாச்சார பரிமாற்ற சுற்றுலாத் திட்டமான `வேர்களைத் தேடி’ திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023, மே 24-ல் சிங்கப்பூரில் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின்படி, அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தேர்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு, தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

கடந்த ஆண்டு நான்கு நாடுகளைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களைக் கொண்ட முதல் பயணம் தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த வருடம் 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் இன்று தொடங்கி ஆகஸ்ட் 15 வரையிலான 15 நாட்களுக்குத் தமிழ்நாட்டில் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறார்கள்’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in