
பாக்டீரியா, பூஞ்சை ஆகியவற்றுக்கு எதிரான மருத்துவ குணங்கள் கோமியத்தில் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார் ஐஐடி சென்னை இயக்குநர் வீ. காமகோடி.
கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கடந்த ஜன.17-ல் நடந்த தனியார் நிகழ்வு ஒன்றில் பேசினார் ஐஐடி சென்னை இயக்குநர் காமகோடி. இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளானது. அமைச்சர் பொன்முடி, எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கோமியம் தொடர்பான காமகோடியின் கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று (ஜன.20) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காமகோடி கூறியதாவது,
`கோமியம் தொடர்பாக அமெரிக்காவில் வெளியிடப்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை உங்களுக்கு அனுப்புகிறேன். கோமியத்தில் பாக்டீரியா, பூஞ்சை ஆகியவற்றுக்கு எதிரான மருத்துவ குணங்கள் உள்ளன என்பது அறிவியல் பூர்வமாக அவற்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவை குறித்துதான் அன்றைக்கு நான் பேசினேன்.
எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலான மொழியில் அவை உள்ளன. அவற்றை நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம். பாக்டீரியா, பூஞ்சை, வீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக மருத்துவ குணங்கள் கோமியத்தில் உள்ளன. இதை நிரூபிக்க 5 ஆய்வுக் கட்டுரைகளும், ஒரு காப்புரிமையும் உள்ளன.
அன்றைக்கு நடந்த நிகழ்வில், அறிவியல் மற்றும் பசுக்கள் குறித்துப் பேசுமாறு என்னிடம் கேட்டார்கள். எனவே கோமியம், சாண எரிவாயு, இயற்கை விவசாயம் போன்ற 4-5 தலைப்புகள் குறித்து அன்றைக்குப் பேசினேன். அமேஸானில் கூட, பஞ்சகவ்ய கிரிதம் என்ற பொருள் விற்பனை செய்யப்படுகிறது. அந்தப் பொருளுக்குத் தகுந்த அங்கீகாரம் உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை. நான் பேசுவது முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தது. அந்த அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்’ என்றார்.