விநாயகர் சதுர்த்தி தொடர்பாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை எதுவும் அனுப்பப்படவில்லை என பள்ளிக்கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பள்ளிகளில் மாணவர்கள் உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தி திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் உறுதிமொழி தயாரிக்கப்பட்டு சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
களிமண், கிழங்கு மாவு போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப் பொருள்களில் செய்யப்படும் விநாயகர் சிலைகளைப் பயன்படுத்த வேண்டும், சிலைகள் மற்றும் பந்தல்களை அலங்கரிப்பதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களைப் பயன்படுத்த வேண்டும், மேல் பூச்சுக்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீர் சார்ந்த, இயற்கையால் மக்கக்கூடிய நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்த வேண்டும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பூக்களைப் பயன்படுத்த வேண்டும், ஒருமுறை பயன்படுத்திய அலங்கார துணிகளை மீண்டும் பயன்படுத்த வேண்டும், குப்பைகளை உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும், அரசு அனுமதித்துள்ள நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளைக் கரைப்போம் என்பது போன்ற அம்சங்கள் உறுதிமொழியில் இடம்பெற்றிருந்தன.
இந்த உறுதிமொழிகளுடன் இறுதியில் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையானது. இந்த சுற்றறிக்கைக்கு ஆசிரியர்கள் கூட்டணி அமைப்பு எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், சுற்றறிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.
மேலும், பள்ளிக்கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கை எதுவும் அனுப்பப்படவில்லை என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன.