
எம்புரான் திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை தொடர்புடைய காட்சிகளை நீக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எம்புரான் திரைப்படத்தில் குஜராத் கலவரம் தொடர்புடைய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் தொடர்புடையவர்களை எதிர்மறைக் கதாபாத்திரமாகத் சித்தரித்திருப்பதாகவும் வலதுசாரிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்கள். இவற்றைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு படத்தில் சுமார் 2 நிமிடங்கள் அளவில் காட்சிகள் நீக்கவும் மாற்றவும் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல, முல்லை பெரியாறு அணை தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகள் படத்தில் இடம்பெற்றுள்ளதாக தமிழ்நாட்டிலிருந்து குரல்கள் எழத் தொடங்கின. நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸும் இதற்கு தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் எம்புரான் திரைப்படம் குறித்து பேசியதாவது:
"எம்புரான் என்ற மலையாளப் படத்தில் முல்லை பெரியாறு அணை தொடர்பாக சர்ச்சைக்குரிய பல கருத்துகள் இடம்பெற்றுள்ளன. திருவிதாங்கூர் மன்னரை மிரட்டிதான் முல்லை பெரியாறு அணை தொடர்பான ஒப்பந்தத்தை வெள்ளையர்கள் செய்துகொண்டார்கள் என்றும் கேரளத்தை அழிக்கக் காத்திருக்கும் முல்லை பெரியாறு அணையைக் குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்றும் அந்தப் படத்தில் காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றுள்ளன. இது கூட்டாட்சி தத்துவத்துக்கும் தேச ஒருமைப்பாட்டுக்கும் எதிரானதாகும். தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கும் எம்புரான் திரைப்படம் தமிழகத்தில் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இதைத் தமிழக அரசு அனுமதித்திருப்பது பெரும் தவறாகும். எம்புரான் திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை தொடர்பாக இடம்பெற்றுள்ள காட்சிகள் அனைத்தையும் நீக்க வேண்டும். அவ்வாறு செய்ய மறுத்தால் அத்திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடத் தடை விதிக்க வேண்டும்" என்றார்.