
குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கருக்கு இடைக்காலப் பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் காவல் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் பல்வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைக் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12-ல் உத்தரவிட்டார்.
சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக, அவருடையத் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.
மூன்றாவது நீதிபதியும் இந்த வழக்கை மீண்டும் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்து வழக்கை மாற்றினார். இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
இதனிடையே, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவருடையத் தாயார் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். மேலும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரியும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 15 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தார்கள். சவுக்கு சங்கருக்கு ஏன் இடைக்காலப் பாதுகாப்பு வழங்கக் கூடாது? என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள் இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கக்கோரி வழக்கை ஒத்திவைத்தார்கள்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காலை முதல் நடைபெற்று வந்த விசாரணையில், சவுக்கு சங்கருக்கு இடைக்காலப் பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கரின் தாயார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஆட்கொணர்வு மனு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் காலதாமதம் செய்வதாகக் குறிப்பிட்டார்கள்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சவுக்கு சங்கர் இதுபோன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார்கள். நீதித் துறைக்கு எதிராகப் பேசியதாகவும், நீதிமன்றம் இதில் நடவடிக்கை எடுத்ததாகவும் முன்வைக்கப்பட்டது. இதனால்தான் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக விளக்கம் கொடுக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு இடைக்காலப் பிணையை வழங்கியுள்ளது. குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை இந்த இடைக்காலப் பிணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஒரு வழக்கில் மட்டுமே உச்ச நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு இடைக்காலப் பிணை வழங்கியுள்ளது. சவுக்கு சங்கர் மீது வேறு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருந்தால், இதற்கு இந்தப் பிணை பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.