சென்னை கார் பந்தயம் தொடர்புடைய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இடையே கடந்தாண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்தாண்டு டிசம்பரில் நடைபெறவிருந்த கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கார் பந்தயம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.
கார் பந்தயம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடிய வகையில் அமையும் என அதிமுக மற்றும் சென்னையைச் சேர்ந்த ஆர்வலர்கள் சிலரால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்விடம் முறையிடப்பட்டது. இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
கார் பந்தய வழக்குகளையெல்லாம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, கார் பந்தயம் தொடர்புடைய ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு கடந்த 24 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பார்வையாளர்கள் கார் பந்தயத்தை இலவசமாகப் பார்ப்பது குறித்தும் போக்குவரத்து இடையூறு இல்லாமல் அனைத்து வசதிகளும் தரமாக செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
"வரும் 31, 1 ஆகிய தேதிகளில் சென்னையில் முதன்முதலாக நடைபெறவிருக்கும் எஃப்4 கார் பந்தயம் தொடர்புடைய ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்றது. அரசு உயர் அலுவலர்கள், சென்னை மாநகராட்சி, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட அனைத்துத் துறையினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
சுமார் 8 ஆயிரம் பேர் அமர்ந்து கார் பந்தயத்தைப் பார்க்கும்படி இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சனிக்கிழமை காலை, முதல் பகுதி போட்டிகள் நடைபெறுகின்றன. இதை பொதுமக்கள் இலவசமாகப் பார்க்கலாம்.
சனிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு தகுதிச் சுற்று தொடங்குகிறது. இரவு 10.30 மணி வரை கார் பந்தயம் நடைபெறும். எந்தவிதமான போக்குவரத்து இடையூறு இல்லாமல் அனைத்து வசதிகளும் தரமாக செய்யப்பட்டுள்ளன" என்றார் உதயநிதி ஸ்டாலின்.