சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் புகார்!

"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சவுக்கு சங்கர் பணம் பெற்றுதான் இப்படி பேசினார்"....
சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் புகார்!
சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் புகார்!

எனது மகள் குறித்தும், என்னை பற்றியும், சவுக்கு சங்கர் அவதூறாக பேசியதாக கூறி மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார் அளித்துள்ளார்.

சவுக்கு சங்கர், நேர்காணல் ஒன்றில் பெண் காவல் அதிகாரிகளைத் தரக்குறைவாகப் பேசியதாக அவர் மீது கோவை, சேலம், திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர் சைபர் கிரைம் காவல் துறையினர், சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கடந்த 4-ம் தேதி கைது செய்தார்கள். இந்த வழக்கில் இவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தேனியில் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறி இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த மனுவில், “சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலில் கடந்த 20.7.2022 அன்று ‘கள்ளக்குறிச்சி விவகாரம், மர்மம் அவிழ்க்கும் சவுக்கு’ என்ற தலைப்பில் சவுக்கு சங்கர் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் எனது மகள் குறித்தும், என்னை பற்றியும், எனது குடும்பத்தினர் பற்றியும் உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற செய்திகளை சவுக்கு சங்கர் தெரிவித்தார். அவர் உள்நோக்கத்துடன் பேசி வருகிறார் என்று தெரிந்தபோதும் தகுந்த ஆதாரம் அப்போது என்னிடம் இல்லை. இந்நிலையில் சவுக்கு சங்கரிடம் உதவியாளராக இருந்த பிரதீப் என்பவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சவுக்கு சங்கர் பணம் பெற்றுதான் இப்படி பேசினார் என்று கூறியுள்ளார். எனவே, இந்த புகாரை ஆதாரமாக வைத்து சவுக்கு சங்கர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in