சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து மதுரை மத்தியச் சிறையிலிருந்து இன்று அவர் ஜாமினில் வெளியே வந்தார்.
பெண் காவல் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் பல்வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைக் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12-ல் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணையின்போது, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கருத்து தெரிவித்தது.
இதையடுத்து, சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 9 அன்று உத்தரவு பிறப்பித்தது. வேறு ஏதேனும் வழக்கு இல்லாதபட்சத்தில் சவுக்கு சங்கரை விடுதலை செய்யலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து அடுத்த மூன்று நாள்களில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. தேனியில் கஞ்சா வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆகஸ்ட் 12 அன்று சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தனக்கு எதிரான அனைத்து 17 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது. இதில் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்தது. மேலும், சவுக்கு சங்கர் மீது வேறு வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லாதபட்சத்தில், இவரைப் பிணையில் விடுவிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் மதுரை மத்தியச் சிறையிலிருந்து இன்று ஜாமினில் வெளியே வந்த சவுக்கு சங்கர், செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நீதிமன்றங்களுக்கு நன்றி. எனது வழக்கறிஞர்களுக்கு நன்றி. தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, இரண்டு முறை என்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. காவல்துறையைப் பற்றி அவதூறாகப் பேசியதாக 17 வழக்குகள் என்மீது பதிவு செய்யப்பட்டன. தமிழகம் முழுக்க காவல்துறை வாகனத்தில் நான் அலைக்கழிக்கப்பட்டேன். சவுக்கு மீடியாவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. விரைவில் சவுக்கு மீடியா ஆரம்பமாகும். மீண்டும் அதே வீரியத்துடன் செயல்படுவேன். எல்லாம் தொடங்குவதற்கு சிறிது அவகாசம் ஆகும் என்றார்.