சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்

சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்

வேறு ஏதேனும் வழக்கு இல்லாத பட்சத்தில் சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்படலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Published on

சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவல் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் பல்வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைக் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12-ல் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணையின்போது, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கருத்து தெரிவித்தது. இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வேறு ஏதேனும் வழக்கு இல்லாத பட்சத்தில் சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்படலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கு விவரம்:

சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவருடையத் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இருநீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தது. வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட, அவர் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.

இதனிடையே, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவருடையத் தாயார் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். மேலும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரியும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு இந்த வழக்கிலிருந்து மட்டும் இடைக்காலப் பிணை வழங்கி, இதுதொடர்புடைய வழக்கை உயர் நீதிமன்றத்தில் விரைந்து விசாரிக்க உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் சவுக்கு சங்கர் தாயார் தரப்பில் முறையிடப்பட்டது. ஆனால், சவுக்கு சங்கர் தொடர்புடைய ஆட்கொணர்வு வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதியிடம் பரிந்துரை செய்தது.

logo
Kizhakku News
kizhakkunews.in