முதல்வரை ஒருமையில் பேசியதை ஏற்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

"சவுக்கு சங்கர் எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார், என்னவெல்லாம் செய்ய மாட்டார் என்பதை பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும்".
சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர் எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என்பதை உத்தரவாத மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சவுக்கு சங்கர், நேர்காணல் ஒன்றில் பெண் காவல் அதிகாரிகளைத் தரக்குறைவாகப் பேசியதாக அவர் மீது கோவை, சேலம், திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர் சைபர் கிரைம் காவல் துறையினர், சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கடந்த 4-ம் தேதி கைது செய்தார்கள். இந்த வழக்கில் இவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தேனியில் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறி இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இதில், சவுக்கு சங்கர் எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என்பதை உத்தரவாத மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் என்னவெல்லாம் செய்ய மாட்டார் என்பதையும் பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறிய நீதிபதிகள் ஆவணங்களை ஆய்வு செய்த பின் மனுவை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சவுக்கு சங்கரை இன்று மாலையே சந்தித்து உத்தரவாதம் பெற்று பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in