சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு!

இதுதவிர, சவுக்கு சங்கருக்கு எதிராக மாநில மகளிர் ஆணையத்தில் பெண் காவல் ஆய்வாளர் உள்பட 3 காவலர்கள் புகார் அளித்துள்ளார்கள்.
சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு!
படம்: https://www.facebook.com/felix.gerald.7
1 min read

முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யூடியூபர் சவுக்கு சங்கர் நேர்காணல் ஒன்றில் பெண் காவல் அதிகாரிகளைத் தரக்குறைவாகப் பேசியதாக அவர் மீது கோவை, சேலம், திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர் சைபர் கிரைம் காவல் துறையினர், சவுக்கு சங்கரை கடந்த 4-ம் தேதி கைது செய்தார்கள். இந்த வழக்கில் இவர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

தேனியில் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறி இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் இவர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

பெண் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், சவுக்கு சங்கரை நேர்காணல் எடுத்த ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று சோதனை செய்த காவல் துறையினர் ஆவணங்களையும், கேமிராக்களையும் பறிமுதல் செய்து சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவையில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, சவுக்கு சங்கருக்கு எதிராக மாநில மகளிர் ஆணையத்தில் பெண் காவல் ஆய்வாளர் உள்பட 3 காவலர்கள் புகார் அளித்துள்ளார்கள். சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in