கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாகப் பார்க்கலாமா?: உதயநிதி விளக்கம்

சுமார் 8 ஆயிரம் பேர் அமர்ந்து கார் பந்தயத்தைப் பார்க்கும்படி இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
படம்: https://x.com/Udhaystalin
படம்: https://x.com/Udhaystalin
1 min read

சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் காலை நடைபெறும் போட்டிகளை பொதுமக்கள் இலவசமாகப் பார்க்கலாம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இடையே கடந்தாண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்தாண்டு டிசம்பரில் நடைபெறவிருந்த கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கார் பந்தயம் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலாளர், இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

"வரும் 31, 1 ஆகிய தேதிகளில் சென்னையில் முதன்முதலாக நடைபெறவிருக்கும் எஃப்4 கார் பந்தயம் தொடர்புடைய ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்றது. அரசு உயர் அலுவலர்கள், சென்னை மாநகராட்சி, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட அனைத்துத் துறையினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

சுமார் 8 ஆயிரம் பேர் அமர்ந்து கார் பந்தயத்தைப் பார்க்கும்படி இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சனிக்கிழமை காலை முதல் பகுதி போட்டிகள் நடைபெறுகின்றன. இதை பொதுமக்கள் இலவசமாகப் பார்க்கலாம்.

சனிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு தகுதிச் சுற்று தொடங்குகிறது. இரவு 10.30 மணி வரை கார் பந்தயம் நடைபெறும். எந்தவிதமான போக்குவரத்து இடையூறு இல்லாமல் அனைத்து வசதிகளும் தரமாக செய்யப்பட்டுள்ளன" என்றார் உதயநிதி ஸ்டாலின்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in