
சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது
"தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை ஒரு கண்துடைப்பு நாடகமாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஆட்சிக்கு இன்னும் 10-12 மாதங்களே உள்ளன. இந்தக் காலத்தில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்பட முடியாத நிலை தான் உள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தும் தேர்தலுக்காக வாக்குகளைப் பெறுவதற்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களாகவே பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மின் கட்டணம் உயர்ந்துள்ளது. சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு வரி 100 சதவீதம், கடை வரி 150 சதவீதம் உயர்வு. குடிநீர் வரி உயர்ந்துள்ளது. பத்திரப் பதிவு வழிகாட்டுதல் மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி எல்லா வகையிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். நாடாளுமன்றத்துக்கு வெளியே போராடுகிறார்கள். அந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் கலந்துகொண்டிருந்தால், தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஸ்டாலின் எடுக்கும் புரட்சி பலனளிக்கும் என்று நினைக்கலாம்.
இந்த ஆட்சியில் உள்ள மிகப் பெரிய பிரச்னைகளை மறைப்பதற்காக இப்படியொரு நாடகத்தை (தொகுதி சீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு) முதல்வர் அரங்கேற்றியிருக்கிறார்.
சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளும் திட்டமில்லை. அதிமுக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, அவர்கள் எதற்குத் தேவை" என்றார் எடப்பாடி பழனிசாமி.
சசிகலா, ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைத்துக் கொள்ளுமாறு பாஜக அழுத்தம் கொடுக்கிறதா என்ற கேள்விக்கு, சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.