
சென்னை மாநகராட்சியில் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டக் குழுவினருடன் மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உள்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் கடந்த ஆகஸ்ட் 1 முதல் குப்பைகளைக் கையாளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மண்டலங்களில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளர்களின் மாத ஊதியம் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு பந்தல் அமைத்து கடந்த ஆகஸ்ட் 1 முதல் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தூய்மைப் பணியாளர்களுடன் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான முதன்மை அமர்வு, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்திவரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்தையிலும் தீர்வு காணப்படவில்லை.
போராட்டக் குழுவினர் சார்பில் உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:
"முதல்வர் உண்மையில் இடதுசாரி என்றால், பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். எங்களை அழைத்துப் பேசுங்கள். எங்களுடைய குறையைத் தீர்த்து வையுங்கள்.
முதல்வர் எங்களுடைய கோரிக்கைகளைப் பரிசீலனை செய்ய வேண்டும். வேண்டுமென்றே போராடவில்லை. தமிழ்நாட்டு அரசை எதிர்த்து வேண்டுமென்றே போராட்டத்தை நடத்த வேண்டும் என்று போராடவில்லை. வேறு வழியில்லாமல் வீதியில் தூக்கிப் போட்டுவிட்டீர்கள்.
முதலில் வேலையைவிட்டுத் தூக்கிப் போட்டீர்கள். தற்போது, மாநகராட்சி வெளியே நாங்கள் இருப்பது அசிங்கம், அழுக்கு என்று சொல்லி எங்களை இங்கிருந்து தூக்கிப் போடப் பார்க்கிறீர்கள். நாங்கள் தொடர்ந்து நிற்போம்" என்று தூய்மைப் பணியாளர்கள் போராட்டக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேயர் பிரியா செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது:
"பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அவர்களுடைய கோரிக்கைகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதத்தில் இருந்தன. முக்கியக் கோரிக்கை என்பது பணிப் பாதுகாப்பு மற்றும் ஊதியத் தொகை பாதுகாப்பு என்பது தான்.
பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அவர்கள் தரப்பிலும் மாநகராட்சி தரப்பிலும் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இதனிடையே, மாநகராட்சி வளாகம் என்பது போராட்டம் நடத்தக்கூடிய இடமல்ல என்பதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் இங்கிருந்து கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகும் துறையின் அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர் சேகர் பாபு, மாநகராட்சியின் ஆணையர், இணை ஆணையர், நான், துணை மேயர் ஒருங்கிணைந்து போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். முதல்கட்டமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, நாங்கள் சென்று கலந்தாலோசித்துவிட்டு வருகிறோம் என்று தெரிவித்திருந்தார்கள். 3, 4 மணி நேரம் துறை அமைச்சரும், மாவட்ட அமைச்சரும் இங்கு காத்திருந்தார்கள். இதுவரைக்கும் அவர்கள் கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை. தூய்மைப் பணியாளர்களுக்கு என்றுமே மாநகராட்சி சார்பில் பணிப் பாதுகாப்பு இருக்கும்" என்று மேயர் பிரியா தெரிவித்தார்.
Chennai Corporation | KN Nehru | Sanitisation Workers