
சென்னையில் ஒரு வாரத்திற்கும் மேலாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அது தொடர்பாக கேள்வி எழுப்பிய நீலம் சோஷியல் பத்திரிகையாளருக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளிக்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் கடந்த ஆக. 1 முதல் குப்பைகளை கையாளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மண்டலங்களில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்களின் மாத ஊதியம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த தனியார்மய முடிவை எதிர்த்து, சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையின் நுழைவாயில் அருகில் கூடாரம் அமைத்து ஒரு வாரத்திற்கும் மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதை ஒட்டி தமிழக அரசு பிரதிநிதிகளுக்கும், தூய்மை பணியாளர்கள் பிரிதிநிதிகளுக்கும் இடையே நேற்று (ஆக. 8) பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் சகிதமாக அமைச்சர் சேகர் பாபு நேற்று நள்ளிரவு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பவே, அவருக்கு பதிலளித்துவிட்டு அவரது ஊடகத்தின் பெயர் குறித்து சேகர் பாபு எதிர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்த செய்தியாளர் `நீலம் சோஷியல்’ என்று பதிலளிக்கவே, `பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன் உங்களை அல்ல’ என்று அமைச்சர் கூறினார். இதைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளார்களிடம் கூறியதாவது,
`அவர்களும் நம் நாட்டு மக்கள். எங்களுடன் ஒன்றி உறவாக கலந்து இருப்பவர்கள். அவர்கள் தரப்பு நியாயத்தை கூறியிருக்கிறாரக்ள். அரசுத் தரப்பில் என்ன செய்ய முடியும் என்பதை சொல்லியிருக்கிறோம். இரு தரப்பினரும் கலந்து பேசியுள்ளோம். நாளை மீண்டும் சந்திப்பதாக சுமூக முடிவை எடுத்திருக்கிறோம்.
நாளை சந்தித்த பிறகு சுமூகமான முடிவு எட்டப்படும். அவர்களின் தேவையை முன்வைத்திருக்கின்றனர், எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை கூறியிருக்கிறோம். இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களிடம் பேசிவிட்டு வந்து நாளை மதியம் சந்திப்பதாக சொல்லியிருக்கிறாரகள். நன்றி’ என்றார்.