விஜயின் கோட் திரைப்படம் இன்று (செப்.05) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கோட் திரைப்படத்தின் தலைப்பில் சனாதனம் உள்ளது என்று அதிருப்தி தெரிவித்துள்ளார் விசிக எம்.பி. ரவிக்குமார்.
இது தொடர்பாக ரவிக்குமார் தன் எக்ஸ் வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு:
`விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா?’ என்றார்.
இந்த பதிவைப் தொடர்ந்து புதிய தலைமுறைக்கு எம்.பி. ரவிக்குமார் அளித்த பேட்டி பின்வருமாறு:
`சனாதனம் என்ற சொல்லின் பொருள் `எப்போதுமே மாறாது’. அதைத்தான் இந்த ` Greatest of all time’ தலைப்பும் கூறுகிறது. எல்லா காலத்திலும் இதுதான் சிறந்தது அப்படியென்றால் இது மாறாதது என்றுதான் அர்த்தம். நாளைக்கு விஜய் வேறொரு படம் நடித்தாலும் அது greatest ஆக இருக்காது என்று இது குறிப்பிடுகிறது.
இந்த மாதிரியான தலைப்பு மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக வழக்கமாக வைக்கப்படும். ஆனால் முழுக்க முழுக்க ஒரு ஆங்கிலத் தலைப்பை வைத்து அதை சுருக்கி உபயோகித்துள்ளனர். இது மாதிரியான ஒரு தலைப்பு இதற்கு முன்பு எந்தத் தமிழ்ப் படத்துக்கும் வைத்த மாதிரி தெரியவில்லை.
விஜய் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி தன்னை முழு நேர அரசியல்வாதியாக அறிவித்துக்கொண்டுள்ளார். அதனால் இதை மாதிரியான தலைப்புகளை வைக்கும்போது அவர் கவனமாக இருக்க வேண்டும். தன்னை ஒரு மதச்சார்பற்ற, தமிழ் மீது பற்று கொண்டிருக்கும் அரசியல்வாதியாக விஜய் வெளிப்படுத்துகிறார். ஆனால் அந்தக் கொள்கைக்கு முரணாக இந்தத் தலைப்பு இருக்கிறது. இதை அவர் தவிர்த்திருக்கலாம்’ என்றார்.