காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள சாம்சங் தொழிற்சாலையின் ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து இன்று 3-வது நாளாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது. வீட்டு உபயோகப் பொருட்களான டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றைத் தயாரிக்கும் இந்தத் தொழிற்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், போனஸ் வழங்குதல், 8 மணி நேரப் பணி நிர்ணயம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்.09-ல் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கடைபிடித்துத் தங்களது போராட்டத்தைத் தொடங்கினார்கள்.
போராட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று (செப்.10), இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் கமலக்கண்ணன் தலைமையில், சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம், போராட்டம் நடத்தி வரும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதைத் தொடர்ந்து சாம்சங் ஊழியர்களின் போராட்டம் 3-வது நாளாக இன்று மீண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை அடுத்து வரும் செப்.13-ல் ஊழியர்களுக்கும், சாம்சங் நிர்வாகத்துக்கும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.