சாம்சங் ஊழியர்களின் போராட்டம் வாபஸ்!

தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாகக் கைவிட்டு பணிக்குச் செல்ல வேண்டும்.
சாம்சங் ஊழியர்களின் போராட்டம் வாபஸ்!
1 min read

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றுவந்த ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்து உள்ள சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 1500-க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

ஊதிய உயர்வு, போனஸ், 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த ஒரு மாத காலமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்பு பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் சாம்சங் தொழிற்சாலை நிர்வாகத்துக்கும், ஊழியர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில் இன்று (அக்.15) தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு, சாம்சங் தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும், ஊழியர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதால், வேலை நிறுத்தத்தைக் கைவிட்டுவிட்டு வரும் அக்.17-ல் சாம்சங் ஊழியர்கள் பணிக்கு திரும்புவதாக உறுதியளித்ததாக, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார்.

இன்று நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:

1. தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்.

2. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மீண்டும் பணிக்கு திரும்பும்போது நிர்வாகம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டகாரணத்திற்காக மட்டும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

3. வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் மேலும் நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.

4. தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின் மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகப் பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in