மகாவிஷ்ணுவை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பரம்பொருள் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தினார். இரு பள்ளிகளிலும் இவர் அறிவியலுக்குப் புறம்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.
சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் இதைத் தட்டிக்கேட்ட ஆசிரியர் சங்கர் என்பவரை மரியாதை குறைவாக நடத்தியிருக்கிறார். இந்த விவகாரம் பூதாகரமானது. மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக இவர் மீது சைதாப்பேட்டை, திருவொற்றியூர் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டன.
இதனிடையே, ஆஸ்திரேலியாவிலிருந்து சனிக்கிழமை பிற்பகல் சென்னை வந்த மகாவிஷ்ணுவைக் காவல் துறையினர் கைது செய்தனர். சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இவரை செப்டம்பர் 20 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி, மகாவிஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மகாவிஷ்ணுவின் பின்புலம் குறித்து அறிய இவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மகாவிஷ்ணு தரப்பில் பிணை கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தன. இதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில், 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு அனுமதி வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, பிணை கோரி தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெறுவதாக மகாவிஷ்ணு தெரிவித்தார். இவருடைய வழக்கறிஞர் பாலமுருகன் வழக்கிலிருந்து விலகினார்.