
நுரையீரல்களைப் பாதிக்கும் ஆர்.எஸ்.வி. தொற்று தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு இடையே அதிகரித்து வருவதாகப் பொது சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
மனிதர்களுக்கு சுவாசக் கோளாறு, மூச்சு விடுவதில் சிரமம், சளி உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்துவதில் ஆர்.எஸ்.வி. என்கிற சுவாச ஒத்திசைவு வைரஸ் (respiratory syncytial virus - RSV), அடினோ வைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆகியவை பிரதானமாகும். இவற்றில் ஆர்.எஸ்.வி தொற்று புதிதாகப் பிறந்த குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கிறது.
அதிலும் குறிப்பாக, இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்த ஆர்.எஸ்.வி. வைரஸ் தொற்றால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். மூக்கு, தொண்டை, நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் இந்த வைரஸ் தொற்று குறைப் பிரசவ குழந்தைகளை மேலும் கடுமையாகப் பாதிக்கிறது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இந்த தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.
இந்த ஆர்.எஸ்.வி. வைரஸ் சுலபமாக தொற்றக்கூடியது. அதிலும், இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருமும்போதும், தும்மும்போதும் காற்றின் வழியே இந்த வைரஸ் பரவும் தன்மையுடையது. இதனாலேயே இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகமாக இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், உலகளவில் குழந்தைகளின் உடல்நலக்குறைவுக்கும், இறப்புக்கும் ஆர்.எஸ்.வி. வைரஸ் தொற்று மிக முக்கியக் காரணியாக இருக்கிறது.
குளிர் மற்றும் மழைக் காலங்களில் ஆர்.எஸ்.வி. வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதன்படி, தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் இதன் பாதிப்பு குழந்தைகளிடையே அதிகரித்து வருவது பொது சுகாதார ஆய்வில் தெரிய வந்துள்ளது.