நாய்கூட பி.ஏ. பட்டம் பெறுகிறது: ஆர்.எஸ். பாரதி பேச்சால் சர்ச்சை

"கல்வி பரவலாகி அடைந்துள்ள வளர்ச்சியை அழிக்கவே நீட் தேர்வு வந்துள்ளது."
நாய்கூட பி.ஏ. பட்டம் பெறுகிறது: ஆர்.எஸ். பாரதி பேச்சால் சர்ச்சை
படம்: https://x.com/DMKITwing/status/1808382966885732721/photo/4
1 min read

நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் நாய்கூட பி.ஏ. பட்டம் பெறுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

தமிழ்நாட்டில் தொடக்க காலத்திலிருந்தே நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. அண்மையில், நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ். பாரதி கூறியதாவது:

"மனதில் படக்கூடியதை வெளிப்படையாகப் பேசக்கூடிய தைரியமுள்ளவன் நான். நான் ஒரு வழக்கறிஞர். இதெல்லாம் குலப் பெருமையால், கோத்திரப் பெருமையால் வந்ததா?. இந்த இயக்கம் போட்ட பிச்சை என்பதை வெளிப்படையாகவே கூறுவேன். திராவிட இயக்கம் இல்லையென்றால், மருத்துவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ள இத்தனை பலகைகளைப் பார்க்க முடியுமா?

நான் பட்டம்பெறும்போது ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், பெயருக்குப் பின் பி.ஏ. எனப் பட்டத்தைச் சேர்த்து வீட்டில் பலகை மாட்டுவார்கள். காரணம், ஊரில் பி.ஏ. பட்டத்தை ஒருவர்தான் பெற்றிருப்பார். தற்போது நாய்கூட பி.ஏ. பட்டத்தை பெறும் நிலை வந்துவிட்டது. யாராவது வீட்டில் பி.ஏ., பி.இ. என பலகையைத் தொங்கவிட்டுள்ளீர்களா? இதற்கு என்ன காரணம்? இந்த வளர்ச்சிக்கு யார் காரணம்?

இதை அழிக்க நினைப்பதற்காகத்தான் நீட் தேர்வு வந்துள்ளது. மாநிலங்களவையிலேயே இதை நான் கூறியிருக்கிறேன்" என்றார் ஆர்.எஸ். பாரதி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in