ஆரியத்தை எதிர்த்துப் பேசுவதை ஊடகங்கள் திரித்துள்ளன: ஆர்.எஸ். பாரதி

நாங்களெல்லாம் படித்திருக்கிறோம் என்றால், இது திராவிட இயக்கம் போட்ட பிச்சை. இப்போது நாய்கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது
ஆரியத்தை எதிர்த்துப் பேசுவதை ஊடகங்கள் திரித்துள்ளன: ஆர்.எஸ். பாரதி

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நேற்று பங்கேற்றுப் பேசினார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி. அவரது பேச்சு சர்ச்சையான நிலையில் இன்று அது குறித்து அவரது எக்ஸ் வலைதள கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

`நாங்களெல்லாம் படித்திருக்கிறோம் என்றால், இது திராவிட இயக்கம் போட்ட பிச்சை. நாங்கள் படிக்கும்போது, யாரேனும் பி.ஏ பட்டம் பெற்றால், உடனே பெயருக்கு பின்னால் பி.ஏ., எனக் குறிப்பிட்டு போர்டு போட்டுக்கொள்வார்கள். இப்போது நாய்கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது. ஊரில் அத்தனைப் பேரும் ஏதேனும் ஒரு பட்டத்தை படித்து பெற்றிருக்கிறார்கள்’ என்று பேசியிருந்தார் ஆர்.எஸ். பாரதி.

இதற்கு விளக்கமளித்து ஆர்.எஸ்.பாரதியின் எக்ஸ் கணக்கில் இடப்பட்டுள்ள பதிவு:

`தன்னையொத்த பார்ப்பனரல்லாதார் சமூகத்தின் வளர்ச்சியை இப்படிச் சொல்லும் நோக்கம் அவருக்கில்லை. ஆனால், உண்மையிலேயே அவர் சொன்ன செய்தி நடந்த ஒன்று தான். கடந்த ஆண்டு ஊடகங்களில் அமெரிக்காவில் ஜஸ்டின் என்ற நாய் டிப்ளோமோ வாங்கிய செய்தி வெளியானது. இது போல ஏராளமான நிகழ்வுகள் மேற்குலகில் உண்டு. போகிற போக்கில் அதை நகைச்சுவையாக சுட்டிக்காட்டிவிட்டுப் போகிறார்.

ஊடகங்கள் அதைப் பிடித்துக் கொண்டு அவர் சொல்ல வந்த ஆதிக்க எதிர்ப்புச் செய்தியை, கோபத்தைப் பின்னுக்குத் தள்ளி திரிக்கின்றன. "ஊரில் அத்தனைப் பேரும் ஏதேனும் ஒரு பட்டத்தை படித்து பெற்றிருக்கிறார்கள். இந்த வளர்ச்சியை அழிக்கதான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது."  என்று நீட் தேர்வையும், இத்தனைக் காலம் நம்மைப் படிக்கவிடாமல் செய்த ஆரியத்தை எதிர்த்துப் பேசுவதைத் திரித்து ஊடகங்கள் வெளியிடுவது அயோக்கியத்தனம் ஆகும்’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in