

பிஹார் மக்களைத் தமிழ்நாட்டில் துன்புறுத்துகிறார்கள் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
”நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் பொய் பிரசாரத்தைச் செய்தார்கள். இங்கிருக்கும் பிஹாரிகள் சிலர் அதனை யூடியூபில் வெளியிட்டார்கள். அது தொடர்பாகக் காவல்துறை இரண்டு பேரைக் கைது செய்தார்கள். உடனே அப்போது பிஹார் முதலமைச்சராக இருந்த நிதீஷ் குமார், தமிழ்நாட்டுக்கு சிறப்புக் குழு ஒன்றை அனுப்பினார். அந்தக் குழு தமிநாட்டிற்கு வந்து ஆய்வு நடத்தினார்கள். அவர்கள் கொடுத்த அறிக்கையைப் பிரதமர் மோடி படித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான், தமிழ்நாட்டில் பிஹாரிகள் நிம்மதியாகவும் சிறப்பாகவும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வாழ்கிறார்கள் என்று அதில் கூறப்பட்டிருப்பது அவருக்குத் தெரியும்.
தமிழ்நாட்டை இவர்கள் கொஞ்சமா அவமானப்படுத்தினார்கள். கல்வித்துறை அமைச்சராக இருக்கும் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நாகரிகமே கிடையாது என்று பேசியிருக்கிறார். தமிழர்கள் கருப்பாக இருக்கிறார்கள் என்று பாஜகவினர் இழிவுப்படுத்தினார்கள். சமீபத்தில் பெங்களூருவில் உணவகத்தில் தாக்குதல் நடந்தபோது அங்கிருந்த பாஜக பெண் அமைச்சர் தமிழன்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று சொன்னார். தமிழன் என்றால் இவ்வளவு கேவலமா?
தமிழ்நாட்டிற்குக் கொடுக்க வேண்டிய நிதியையும் கொடுக்கவில்லை. கல்வித்துறைக்கு கிடைக்க வேண்டிய பணத்தையும் கொடுக்கவில்லை. நாம் தரும் ஒரு ரூபாய்க்கு 29 காசு திருப்பித் தருகிறார்கள். ஆனால் பிஹாருக்கு மட்டும் ஒரு ரூபாய்க்கு ஏழு ரூபாய் தருகிறார்கள். பாஜகவின் 20 ஆண்டு கால ஆட்சியில் 15 ஆண்டுகாலம் அவர்களுடன் கூட்டணியில் இருந்தார்கள். ஆனால் வளர்ச்சி அடைய முடிந்ததா? இதையெல்லாம் மக்கள் கேட்க போகிறார்கள் என்பதற்காகத்தான் மோடி அவர்களை இப்படியெல்லாம் திசை திருப்புகிறார்.
கடந்த ஆண்டு 10-ம் வகுப்புத் தேர்வில் சென்னை அருகே பிஹாரி குடும்பத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 100-க்கு 93 மதிப்பெண் எடுத்தார். அப்போது அவர் எந்த மாநிலத்தின் மாணவர்களாக இருந்தாலும் தமிழ்நாட்டில் படித்து நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள் என்று பேட்டி கொடுத்தார். பிஹாரைச் சேர்ந்த பெண் ஒருவர் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழ் பயின்றதைத் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பினார்கள். இதையெல்லாம் தெரிந்து கொண்ட பின் மோடி பேச வேண்டும்.
தேர்தல் என்றால் உடனே தமிழ்நாட்டிற்கு வந்து மோடி குறள் ஒன்றைச் சொல்லிவிடுவார். அவர் சொல்லும் குறள் தமிழனுக்கும் புரியாது. அவருக்கும் புரியாது. அப்படிப்பட்ட குளறுபடியான தமிழில் பேசி ஏமாற்றுவார். நாங்கள் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறோம். தமிழ் மண் இந்தி திணிப்பைத்தான் எதிர்த்ததே தவிர இந்தியை ஒருபோதும் எதிர்த்தது கிடையாது.
சென்னையில் 30-40% மக்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான். இங்கு அவர்கள் வசதி வாய்ப்போடு இருக்கிறார்களா இல்லையா என்று ஆய்வு செய்து பாருங்கள்.
ஆங்கிலேயர்கள் நம்மைப் பிரித்து ஆண்டதாகக் கூறுகிறார்களே, உண்மையில் அதைவிட மோசமான பாஜக ஆட்சியில்தான் மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், எஸ்.ஐ.ஆரின் பெயரால் நாட்டின் ஒற்றுமையைப் பிரிக்கிறார்கள். இதற்கெல்லாம் பிஹார் மக்கள் ஏமாற மாட்டார்கள்.
தமிழ்நாட்டு மக்களும் ஏமாற மாட்டார்கள் என்று மோடிக்கே தெரியும். அதனால்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழ்நாட்டுக்கு எட்டு முறை வந்தார். அதற்காகவே அவரது தொகுதியான வாரணாசியில் தேர்தலைக் கடைசியாக வைத்துக் கொண்டார்.
பிஹாரில் ஒழுங்காக வேலை கொடுத்திருந்தால் அவர்கள் ஏன் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்? நீங்கள் உங்கள் மக்களைக் காப்பாற்றத் தவறியதற்கு எங்கள் மீது பழி போடுவதா? நாங்கள் வேலை கொடுத்து பிஹார் மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
DMK organizational secretary R.S. Bharathi has condemned Prime Minister Modi's remark that people from Bihar are being harassed in Tamil Nadu.
