
தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்காக மத்திய நிதிநிலை அறிக்கையில், ரூ. 6,362 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் கூறியதாவது:
"தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல 2,749 ஹெக்டேர் நிலம் தேவை. ஆனால், 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளன. திட்டங்களைச் செயல்படுத்த மாநிலங்களின் ஒத்துழைப்பும் தேவை. நிதி இல்லாமல் இல்லை. இரு தரப்பிலும் முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே திட்டங்களைச் செயல்படுத்த முடியும்.
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில்வே திட்டத்தைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமாகக் கடிதம் வந்துள்ளது. நிறைய திட்டங்கள் தாமதமாவதற்குக் காரணம், போதிய நிலம் இல்லாததுதான்.
நடப்பாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு ஒத்துழைக்கும்பட்சத்தில் இந்த நிதி மேலும் அதிகரிக்கப்படும். திட்டங்கள் முன்னேற்றம் காண, போதிய நிலம் தேவை.
தமிழ்நாட்டுக்கு கடந்தாண்டு ரூ. 6,080 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நிகழாண்டில் ரூ. 6,362 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை ரூ. 8 ஆயிரம் கோடியாகவும் உயர்த்தலாம். ஆனால், திட்டங்கள் முன்னேற்றம் காண வேண்டும். நிலம் கையகப்படுத்தப்பட்டால், நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கும்" என்றார் அஸ்வினி வைஷ்ணவ்.