
தகுதியுடையப் பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கும் திட்டம் டிசம்பர் முதல் நடைமுறைக்கு வரும் என்பதை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் நேற்று நான்காவது முறையாகப் பதவியேற்றார். ஜார்க்கண்ட் அமைச்சரவையில் 12 அமைச்சர்கள் வரை இடம் வகிக்கலாம் என்ற நிலையில், ஹேமந்த் சோரன் மட்டுமே நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
முதல்வராகப் பதவியேற்று ஒரு மணி நேரத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் ஹேமந்த் சோரன். இதைத் தொடர்ந்து, பல்வேறு அறிவிப்புகளை ஹேமந்த் சோரன் வெளியிட்டார். இதில் கவனம் ஈர்த்த மிக முக்கியமான அறிவிப்பு பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்குவது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணி ஜார்க்கண்டில் ஆட்சிக்கு வந்ததற்கு மிக முக்கியக் காரணமாகக் கூறப்படுவது தகுதியுடையப் பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டம். இதை மாதம் ரூ. 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
முன்பே அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், டிசம்பர் முதல் தகுதியுடையப் பெண்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ. 2,500 செலுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஹேமந்த் சோரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.
இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே மாநிலம் முழுவதும் 50 லட்சம் பெண்கள் பலனடைந்து வருகிறார்கள்.