ரௌடிகளை ஒடுக்க வேண்டும்: சென்னை காவல் ஆணையர்

ஆம்ஸ்ட்ராங் கொலையைத் தொடர்ந்து, சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார்.
ரௌடிகளை ஒடுக்க வேண்டும்: சென்னை காவல் ஆணையர்

சட்டம் - ஒழுங்கு, குற்றத்தடுப்பு, போக்குவரத்து சிக்கல்கள், ரௌடிகளை ஒடுக்குவது உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என புதிதாகப் பதவியேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை பெரம்பூரில் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டதால், இந்தச் சம்பவம் தேசிய அளவில் கவனம் பெற்றது.

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வைத்தன. இதைத் தொடர்ந்து, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ராத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார். சென்னை ஆணையராக அருண் இன்றே பொறுப்பேற்றுக் கொண்டார்.

காவல் ஆணையராகப் பொறுப்பேற்றவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"சென்னை எனக்குப் புதிதல்ல. சட்டம் - ஒழுங்கு, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள், போக்குவரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள், ரவுடிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது, காவல் துறையில் இருக்கும் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்பதை எதன் அடிப்படையில் கூற முடியும்? இதற்கு ஏதாவது புள்ளி விவரம் தேவை. குற்றங்கள் என்பது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. இதைத் தடுத்து வருகிறோம்.

குற்றச் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது, முன்பு குறைந்திருந்தது என்பதைப் புள்ளி விவரத்தின் அடிப்படையில்தான் கூற முடியும். புள்ளி விவரத்தைப் பார்த்தால் 2022, 2023-ஐ காட்டிலும் கொலைச் சம்பவங்கள் குறைவாகவே நடந்துள்ளன.

இருந்தபோதிலும், தற்போதைய விஷயங்கள் மற்றும் ரவுடிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய முன்னுரிமை. அதைச் செய்வோம்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in