அரசியல்வாதி முதல் தயாரிப்பாளர் வரை: ஆர்.எம். வீரப்பன் கடந்து வந்த பாதை

எம்.ஜி.ஆர். மற்றும் ரஜினி ஆகியோர் நடித்த பல படங்களைத் தயாரித்துள்ளார்.
ஆர்.எம். வீரப்பன்
ஆர்.எம். வீரப்பன்

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 98.

ஆர்.எம். வீ என்று அழைக்கப்படும் ஆர்.எம். வீரப்பன், 1926-ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வல்லத்திராக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர்.

அரசியல் தலைவர்களில் முக்கியமானவரான ஆர்.எம். வீரப்பன், எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அவரது அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர்.

அதேபோல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார். அரசியல் களத்தில் மட்டுமல்லாமல் திரையுலகிலும் முத்திரை பதித்தவர் ஆர்.எம். வீரப்பன்.

மறைந்த முதல்வர் எம்ஜிஆர்,1953-ல் ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நாடக மன்றம் மற்றும் ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்களுக்கு பொறுப்பாளராக ஆர்.எம். வீரப்பன் நியமிக்கப்பட்டார்.

இதன் பிறகு ஆர்.எம். வீரப்பன் 1963-ல் ‘சத்யா மூவிஸ்’ என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கினார். எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களைத் தயாரித்தார். இதைத் தொடர்ந்து ரஜினி நடித்த பல படங்களையும் தயாரித்தார்.

அரசியலைப் பொறுத்தவரையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்த இவர், எம்.ஜி.ஆர். அதிமுக என்ற தனிக் கட்சியை உருவாக்கும்போது அதிக பங்களிப்பை அளித்துள்ளார்.

மேலும், 1984-ல் எம்.ஜி.ஆர். உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டார்.

ஆர்.எம். வீரப்பன் 1977 - 1986 வரை சட்டமேலவை உறுப்பினராக இருந்தார். 1986 மற்றும் 1991- ல் நடைபெற்ற இடைத் தேர்தலில் முறையே நெல்லை மற்றும் காங்கேயம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆர்.எம். வீரப்பன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகவும், உள்ளாட்சி துறை அமைச்சராகவும், இளைஞர் நலன் மற்றும் கல்வித் துறை அமைச்சராகவும் பதவிகளை ஏற்றிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், வீட்டில் இருந்தபடியும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து திடீர் மூச்சு திணறல் காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரப்பன் சென்னையில் இன்று காலமானார்.

ஏற்கெனவே, தனது உடல் எங்கு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை அவர் கூறியிருக்கிறார்.

இது குறித்து, “இப்போது நான் வாழ்க்கையின் அந்தி வேளைக்கு வந்து விட்டேன். இன்னும் எத்தனை காலம் எனக்கு விதிக்கப் பட்டிருக்கிறது என்பதை அறியேன். எனக்குக் கடன் இல்லை. என் குடும்பத்தினர் யாரையும் கடனாளியாக வைக்கவில்லை. இந்த மன நிறைவோடும், அமைதியோடும் இறுதிவரை உழைத்துக் கொண்டே வாழ வேண்டும். இதுவே என் விருப்பம்" என கூறியிருக்கிறார் வீரப்பன்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in