
அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கில், அவரது மாமியார் சித்ராதேவி இன்று (ஜூலை 4) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசிக்கு உள்பட்ட கைகாட்டிபுதூரை சேர்ந்த கவின்குமாருக்கு, ரிதன்யா என்பவருடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் 28 அன்று மொண்டிபாளையம் அருகே காரில் இருந்தபடி ரிதன்யா விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது தந்தைக்கு ரிதன்யா அனுப்பிய வாட்ஸ்அப் குரல் பதிவில், தனது தற்கொலைக்குக் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவிநாசி கோட்டாட்சியர் மோகனசுந்தரம் விசாரணையைத் தொடங்கிய நிலையில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது துன்புறுத்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சேவூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.
ஆனால், கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மட்டும் கைது செய்யப்பட்டனர். உடல்நிலைக் கோளாறு காரணத்தால் சித்ராதேவி கைது செய்யப்படவில்லை.
கவின்குமார் குடும்பம் பாரம்பரியமான காங்கிரஸ் பின்னணியைச் சேர்ந்தது என்பதால், காங்கிரஸ் கட்சியில் இருந்து வழங்கப்படும் அழுத்தம் காரணமாக இந்த வழக்கை தீவிரமான முறையில் காவல்துறையினர் விசாரிக்கவில்லை என்று ரிதன்யா குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில், இன்று (ஜூலை 4) சித்ராதேவி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மேலும், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, இன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவை சந்தித்து, இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.