பாமகவில் அதிகரிக்கும் மோதல்: சபாநாயகரிடம் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மனு!

அருளை கட்சியின் இணை பொதுச்செயலாளராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

பாமக சட்டப்பேரவை கொறடா பொறுப்பில் இருந்து சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை நீக்கக்கோரி அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரிடம் இன்று (ஜூலை 4) மனு அளித்துள்ளனர்.

கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோருக்கு இடையே கடந்த ஓரிரு மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்பினரும், எதிர் தரப்பு ஆதரவு நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி, அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ராமதாஸின் ஆதரவாளரான சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. எஸ். அருளை கட்சியில் இருந்து அன்புமணி நீக்கினார். அதேநேரம், அருளை கட்சியின் இணை பொதுச்செயலாளராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில், அன்புமணி ஆதரவு பாமக எம்.எல்.ஏ.க்களான எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மைலம் சிவக்குமார், எஸ். சதாசிவம் ஆகியோருடன் வழக்கறிஞர் பாலுவும் இணைந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து இன்று (ஜூலை 4) மனு அளித்தனர்.

அதில், எம்.எல்.ஏ. அருளை, பாமக சட்டப்பேரவை கொறடா பொறுப்பில் இருந்து நீக்கக்கோரும், அக்கட்சித் தலைவர் அன்புமணியின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. புதிய கொறடாவாக மைலம் சிவக்குமாரை நியமிக்கும்படி அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஜி.கே. மணி நீடிப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in