சட்டப்பேரவையில் பேசிக்கொண்ட இபிஎஸ் - செங்கோட்டையன்!

"நான் முதல்வரானதிலிருந்து அதிமுகவைப் பிரிக்கும் திட்டத்தைப் போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த தலைவர் செங்கோட்டையன் இடையே சுமூகப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தைச் செயல்படுத்தியதற்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழாவொன்று அண்மையில் நடைபெற்றது. விவசாய அமைப்புகள் சார்பாக நடத்தப்பட்ட இந்த விழாவில், எம்ஜிஆர்-ஜெயலலிதா புகைப்படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி அதிமுக முன்னாள் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. அதிமுகவுக்குள் இது பெரிய பேசுபொருளானது.

அப்போதிலிருந்து இன்று வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையே பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லத் திருமண விழாவிலும் சந்தித்துக்கொள்ளவில்லை.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. மேலும், வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவைத் தனியாகச் சந்தித்தார் செங்கோட்டையன்.

எடப்பாடி பழனிசாமியைச் சந்திப்பதை செங்கோட்டையன் தவிர்த்து வருவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, இதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று பதிலளித்தார்.

இந்தச் சூழல்களுக்கு மத்தியில் தான் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமுக சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானம் தோல்வியடைந்தாலும் செங்கோட்டையன் தீர்மானத்துக்கு ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்தார். மேலும், தீர்மானம் மீதான டிவிஷனல் வாக்கெடுப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் சட்டப்பேரவைக்குள் செங்கோட்டையன் விளக்கமளித்தார். சட்டப்பேரவைக்குள் இருவரும் பேசிக்கொண்டதன் மூலம், இருவரிடையே சமாதானம் ஏற்பட்டதாகப் புரிந்துகொள்ளப்பட்டது.

இதன்பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செங்கோட்டையன் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

"இது உங்களுக்கு மிகவும் அவசியமானது தானா? எங்களை ஏன் பிரித்துப் பார்ப்பதிலேயே இருக்கிறீர்கள்? நன்றாக உஷாராகவே கேள்வியைக் கேட்கிறீர்கள். எப்போது பார்த்தாலும் இதில் ஏதாவது குழப்பம் வருமா என்று தான் இருக்கிறீர்கள். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்க வேண்டும். நாங்கள் எப்போதுமே ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது. நான் முதல்வரானதிலிருந்து இந்தத் திட்டத்தைப் போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதை நாங்கள் உடைத்தெறிந்துகொண்டுதான் இருக்கிறோம். அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது, முடக்க முடியாது. இதற்கு முயற்சிப்பவர்கள் தான் மூக்குடைபட்டு போவார்கள்" என்றார் எடப்பாடி பழனிசாமி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in