மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்: கர்நாடக அரசு | Mekedatu |

நிலையான எதிர்காலத்திற்காக கர்நாடகாவின் நீர் உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படும்...
மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்: கர்நாடக அரசு
மேகதாது திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்: கர்நாடக அரசு
1 min read

மேகதாது திட்டத்திற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகத்தின் கனபுரா அருகே சுமார் ரூ. 9,000 கோடி மதிப்பீட்டில் மேகதாது அணையைக் கட்டும் நடவடிக்கையில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் காவிரி நீர் பகிர்வில் சிக்கல் ஏற்படும் என்று தமிழ்நாடு அரசு அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

மேகதாதுவில் அணை கட்டும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்ய மத்திய நீர் வள ஆணையம் கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்திருந்தது. இந்த அனுமதியை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. தொடர்ந்து, மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க கோரி கர்நாடக அரசும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்குகளைக் கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. வாதங்களைக் கேட்ட பின் பேசிய நீதிபதிகள், “அணை குறித்த தமிழ்நாட்டின் அச்சம் ஆரம்ப கட்டமானது” என்று கூறி, திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்திற்கு அனுமதி வழங்கினர். மேலும் தமிழ்நாடு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கர்நாடகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர்

கர்நாடகத்தில் 2026 - 27 நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமய்யா நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அப்போது மேகதாது திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் சித்தராமய்யா இன்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள சமூக ஊடகப் பதிவில் கூறியிருப்பதாவது:-

விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு

“கர்நாடக பட்ஜெட் 2026-27 முக்கியமான நீர்வளத் திட்டங்களை வலியுறுத்துகிறது, இதில் மேகதாது திட்டத்திற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்தல், யுகேபி நிலை 3-ன் கீழ் திருத்தப்பட்ட நில ஒப்புதல் விகிதங்களை வழங்குதல் மற்றும் மத்திய ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள கலசா-பண்டுரா திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது ஆகியவை அடங்கும். நிலையான எதிர்காலத்திற்காக கர்நாடகாவின் நீர் உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

"The Karnataka Budget 2026-27 emphasizes crucial water resource projects, including submitting the Revised Detailed Project Report (DPR) for the Mekedatu project for Union Government approval" says Siddaramaiah

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in