
சென்னையில் ரூ. 80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (ஜூன் 21) திறந்து வைக்கிறார்.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மட்டுமல்லாமல், மாநில அரசியல் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள வள்ளுவர் கோட்டம், அய்யன் திருவள்ளுவர் மற்றும் திருக்குறளின் புகழை பறை சாற்றும் வகையில், கடந்த 1974-1975 வருடங்களில் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசால் சென்னை மாநகரின் மையப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் நிர்மாணிக்கப்பட்டது.
25 ஜூன் 1975-ல் தேசிய அளவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று வள்ளுவர் கோட்டத்தை திறந்துவைக்க தேதிகள் குறிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய திமுக அரசு கலைக்கப்பட்டு, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 1976-ம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அஹமத், வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் கலந்துகொள்ள கலைஞர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதை ஒட்டி, `கோட்டம் திறக்கப்படுகிறது, குறளோவியம் தீட்டப்படுகிறது’ என்ற தலைப்பில் அவர் கடிதம் எழுதினார்.
13 ஆண்டுகள் கழித்து 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றதும், கலைஞர் கருணாநிதியின் பதவி ஏற்பு விழா வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டு 50 ஆண்டுகள் நெருங்கும் வேளையில், ரூ. 80 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதன்படி புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜூன் 21) திறந்து வைக்கிறார்.
சிறப்பம்சங்கள்:
தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு 20,000 சதுர அடி பரப்பளவில் 1,548 இருக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட பிரம்மாண்டமான `அய்யன் வள்ளுவர் கலையரங்கம்’ மேம்படுத்தப்பட்டுள்ளது.
100 பேர் அமரும் வசதியுடன் `திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம்’ இலக்கிய விவாதங்கள், ஆவணப்பதிவு மற்றும் கல்வி ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் சிலையை நோக்கிப் பார்வையாளர்கள் தடையின்றிச் செல்வதற்கு வசதியான மூடிய நடைபாதையுடன் கூடிய "வேயா மாடம்" ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர்த் தேர் வடிவில் 106 அடி உயரமுடைய திருக்குறள் கருத்துகளை விளக்கும் சிற்பங்கள் நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள கல் தேர் ஒலி-ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதியின் உரை விளக்கத்துடன் 1,330 திருக்குறள்களையும் கொண்ட குறள் பலகைகள் அமைக்கப்பட்டு ஓவியங்களுடன், `குறள் மணிமாடம்’ புதிய வடிவம் பெற்றுள்ளது.
27,000 சதுர அடி பரப்பில் தரை நிலை, தரையின் கீழ் நிலப்பகுதிகளில் 162 கார்கள் வரை நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வள்ளுவர் கோட்டத்தைப் பார்வையிட வருகை புரியும் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் 3,336 சதுர அடியில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. உணவகப் பகுதியில் 72 பேர் அமரவும், காபி அருந்தும் பகுதியில் 24 பேர் அமரவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
275.56 சதுர அடி பரப்பளவு கொண்ட நினைவுப் பொருள் மற்றும் பரிசுப் பொருள்களுக்கான விற்பனையகமும் அருகே அமைக்கப்பட்டுள்ளது.
பார்வையிடும் பொதுமக்கள் மகிழும் வகையில் இசை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன.