
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாள்களில் தீர்வு காணப்படும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் வகையில் `உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்படும் என்று கடந்த வாரம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், இந்த திட்டம் குறித்து இன்று (ஜூலை 14) நண்பகல் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூடுதல் தலைமை செயலாளர் அமுதா பேசியதாவது,
`அரசாங்கத்தின் செயல்பாடுகள், திட்டங்கள், தகவல்கள் உரிய நேரத்தில் மக்களை சென்றடையவேண்டும், அதற்கு ஊடகவியலாளர்களிடம் சரியான முறையில் எடுத்துரைக்கவேண்டும் என்று முதல்வர் நினைத்தார். தகவல் தொடர்பு தெளிவாகவும், விரைவாகவும், துல்லியமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.
4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அரசுத் துறைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. எனக்கு 7-8 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாளை (ஜூலை 15) முதல்வர் ஸ்டாலின், `உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கடலூர் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்கிறார்.
கடந்த 4 ஆண்டுகளில் 1 கோடியே 5 லட்சம் மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. அதில் ஜூன் 30 வரை 1கோடியே 1 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மக்களுக்காக முகாம்கள் நடத்துவதை மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்று முதல்வர் கூறினார். (இந்த திட்டத்தின் கீழ்) நகர்ப்புறங்களில் 13 துறைகள் மூலம் 43 சேவைகள் வழங்கப்படவுள்ளன. ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகள் வழங்கப்படவுள்ளன.
மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கி அவற்றை துறைகளிடம் அனுப்பி, கிடைக்கும் பதில்கள் உடனடியாக மக்களுக்குத் தெரிவிக்கப்படவுள்ளது. அளிக்கப்படும் பதில்களில் மக்களுக்கு திருப்தியில்லை என்றால், சம்மந்தப்பட்ட உயரதிகாரிகளிடம் அதற்கு மேல்முறையீடு செய்யலாம்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாள்களில் தீர்வு காணப்படும். முகாம்கள் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே தன்னார்வலர்களை வீடு வீடாக அனுப்பி மக்களிடம் தகவல் தெரிவிக்கப்படும். முகாம்களுக்கு என்னென்ன ஆவணங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதும் மக்களிடம் தெரிவிக்கப்படும்.
உரிய ஆவணங்களுடன் முகாம்களுக்கு வந்தால் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு வழங்கப்படும். ஒரு லட்சம் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள். நாளை (ஜூலை 15) தொடங்கி நவம்பர் வரை இந்த முகாம்கள் நடைபெறும்.
நகர்புறப் பகுதிகளில் 3,768 முகாம்கள், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்கள் என ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும்’ என்றார்.