வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!
மத்திய அரசின் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
மக்களவையில் கடந்த ஆக.8-ல் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜூ வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்து அறிக்கை வழங்க பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 30 அன்று, 650-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட கூட்டுக்குழு அறிக்கை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 27) முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
`வக்ஃபு வாரிய சட்டதிருத்த மசோதாவானது சிறுபான்மை இஸ்லாமிய மக்களை வஞ்சிப்பதாக அமைந்துள்ளதை நாம் கடுமையாக எதிர்க்கவேண்டும். அதற்கான தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் நான் முன்மொழிகிறேன்.
வக்ஃபு சட்டம் 1954-ல் இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இன்றைய மத்திய பாஜக கூட்டணி அரசு, சில திருத்தங்களை கொண்டுவருவதற்கான முன்வரைவினை கடந்த 8-8-2024 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
வக்ஃபு வாரியத்தில் அரசியல் தலையீட்டை ஆதரிப்பதாகவும், மத உரிமைகளை பாதிப்பதாகவும் மத்திய அரசின் சட்டதிருத்தத்தில் இருந்ததால் அதனை திமுக உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இதை அடுத்து நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு இதை அனுப்பினார்கள்.
இந்த சட்டதிருத்தத்தின் மூலம் மத்திய வக்ஃபு கவுன்சில் மற்றும் மாநில வக்ஃபு வாரியங்களின் கட்டமைப்பு மாற்றப்பட்டு அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகரிக்கும். இது வக்ஃபு நிறுவனங்களின் சுயாட்சியை பாதிக்கும். வக்ஃபு நிலங்களை நில அளவை செய்யும் அதிகாரம், நில அளவை ஆணையரிடம் இருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றப்படும்.
இதன் மூலம் வக்ஃபு நிலங்கள் குறித்து முடிவு செய்யும் அதிகாரம், வக்ஃபு வாரியங்களிடம் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கும் குறையாமல் இஸ்லாமியத்தை பின்பற்றியவர்கள் மட்டுமே வக்ஃபு வாரியத்தில் பதவியை வகிக்க முடியும் என்று கட்டுப்படுத்துகிறது. இது இஸ்லாமியர்கள் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட வக்ஃபுகளை செல்லாது என்று ஆக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்குகிறது.
இஸ்லாமிய மக்களில் இரண்டு குறிப்பிட்ட வகுப்பினருக்கு தனி சொத்து வாரியத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். மாநில வக்ஃபு வாரியங்களில் இஸ்லாமியர் அல்லாத இரண்டு உறுப்பினர்களை இணைக்கவேண்டும் என்று இந்த சட்டதிருத்தம் கட்டாயப்படுத்துகிறது. இதில் இஸ்லாமியர்களின் மத நிர்வாகத்தில் அரசு தலையிடும் முயற்சியாகும்.
இந்த சட்டதிருத்தம் வக்ஃபு அமைப்பையே காலப்போக்கில் செயல்படவிடாமல் முடக்கிவிடும். நாம் இதை எதிர்க்கவேண்டியவர்களாக இருக்கிறோம். எனவே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
`இந்திய திருநாட்டில் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதங்களை சார்ந்த மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். அனைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களை பின்பற்றுவதற்கு அரசியலமைப்பு சட்டம் உரிமை வழங்கியுள்ளது. அதை பேணிக்காக்கும் கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு உள்ளது.
ஆனால் அதற்கு மாறாக சிறுபான்மையின இஸ்லாமிய சமூக மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் வக்ஃபு சட்டத்தினை திருத்துவதற்கு கடந்த 2024 ஆம் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்ஃபு வாரிய சட்ட திருத்த முன்வடிவினை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்று இப்பேரவை வலியுறுத்துகிறது’ என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.