
இடஒதுக்கீட்டால் தரம் குறைகிறது என்கிற வாதத்தை எக்காலத்திலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் இடஒதுக்கீடு மற்றும் இலவசம் குறித்து அவர் எடுத்துரைத்தார்.
"பலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், நான் 95 மதிப்பெண்கள் எடுத்தேன். நீ 70 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தாய். 70 மதிப்பெண்கள் எடுத்த நீ, 95 மதிப்பெண்கள் எடுத்த என்னைத் தள்ளிவிட்டு, உனக்கு இடம் கிடைத்துவிட்டது. இது அவனுக்கான கோபம்.
ஆனால், அவன் எதை யோசிக்க மறுக்கிறான் என்றால் 75 மதிப்பெண்கள் எடுத்தவன் அதுவரை ஒரு காலில் ஓடியிருக்கிறான். 95 மதிப்பெண்கள் எடுத்தவன் இரு கால்களில் ஓடிக்கொண்டிருக்கிறான். அப்போது இரு கால்களில் ஓடி நான் முதலில் வந்தேன். ஆனால், உனக்கு 50 மீட்டரிலேயே வெற்றி என்று கூறிவிட்டார்கள் என்று வாதிட்டால், அப்படி தான் கூறுவார்கள்.
காரணம், அவனுக்கான அந்தப் பிரச்னை இருக்கிறது. எப்போது நாம் அவனையும் இரு கால்களில் ஓட வைக்கிறோமோ, அதுவரை இடஒதுக்கீட்டை இந்த நாட்டிலிருந்து நாம் எடுக்க முடியாது.
இடஒதுக்கீட்டால் தரம் தாழ்ந்துவிட்டது என நினைக்கிறீர்கள். மரியாதையுடன் முரண்படுகிறேன் நான். காரணம், தினம் தினம் பார்த்துக்கொண்டிருக்கிற ஆள் நான்.
இடஒதுக்கீடு கொடுத்ததால் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர் சமூகத்திலிருந்து அற்புதமான தகுதி வாய்ந்தவர்களைப் பார்க்கிறேன் நான். எனவே, நாம் இதைப் பொதுப்படையாகப் பேச முடியாது. இதைத் தரவுகளோடு வைத்து தான் பேச முடியும்.
இடஒதுக்கீட்டால் தரம் குறைகிறது என்கிற வாதத்தை எக்காலத்திலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அப்படியொன்று கிடையவே கிடையாது. முதலில், நாடு முன்னேற எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். யாரோ ஒரு 10 பேர் வாய்ப்புகளை வைத்துக்கொண்டு நாடு முன்னேற முடியாது. எல்லோருக்கும் வாய்ப்புகளைக் கொடுத்தால் தான் நாடு முன்னேறும். அந்த வாய்ப்பைக் கொடுப்பதற்கு இடஒதுக்கீடு மிக முக்கியம். இது தான் நிதர்சனம்" என்றார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
முன்னதாக, இலவசத்துக்கு எதிராக அவர் பேசினார்.
"நமக்கு இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்கிற பிரச்னை இருக்கிறது. இதில் நாம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இல்லாதவனுக்கு, கஷ்டப்படுகிறவனுக்கு, பசியால் வாடுபவனுக்கு நாம் எதையாவது கொடுக்கும்போது பரவாயில்லை. ஆனால், என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக உங்களுக்கு நான் எதையோ இலவசமாகக் கொடுக்கிறேன் என்றால் தயவுசெய்து யோசியுங்கள்.
காரணம், இது சமூக ஊடகத்தைப் போன்றது தான். சமூக ஊடகங்களில் நாம் எதற்காவது பணம் செலுத்துகிறோமா? வாட்ஸ்ஆப், யூடியூப் பேஸ்புக், ட்விட்டர் என எல்லாமே இலவசம் தான். நம்மை உள்ளே இழுப்பதற்காகவே எல்லாம் இலவசம். உள்ளை இழுத்துக்கொண்டு நம்மைக் காலி செய்வதற்கான அம்சம் தான் இவை எல்லாமே.
இலவசம் என்பது நம் ரத்தத்தில் எங்கேயோ ஊறிப்போயுள்ளது. இலவசமாக எதைக் கொடுத்தாலும் நாம் அலைந்து சென்று நிற்பது. நமக்கு வெட்கம், அவமானம் இல்லை. இதில் என்னையும் சேர்த்துக்கொள்கிறேன். நம்மை ஆள்பவர்கள் இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதை நாம் அனுமதிக்கக் கூடாது" என்றார் ஆனந்த் வெங்கடேஷ்.
Justice Anand Venkatesh | Reservation | Reservation in India | Free Concept |