கோயம்பேட்டில் இருந்து பட்டாபிராம் வரை மெட்ரோவை நீட்டிக்க அறிக்கை சமர்பிப்பு!

19 புதிய மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமையவிருக்கும் இந்த நீட்டிப்பு திட்டத்திற்காக ரூ. 9,744 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து பட்டாபிராம் வரை மெட்ரோவை நீட்டிக்க அறிக்கை சமர்பிப்பு!
1 min read

சென்னை மெட்ரோ இரயில் போக்குவரத்து அமைப்பில் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை புதிய வழித்தடம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு முதல் பட்டாபிராம் (வெளிவட்டச் சாலை) வரை மெட்ரோ இரயில் போக்குவரத்து அமைப்பில் நீட்டிப்பு மேற்கொள்வதற்கான விரிவான திட்ட அறிக்கையை (Detailed Project Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபாலிடம் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது.

கோயம்பேட்டில் தொடங்கி பாடி புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி வழியாகச் சென்று பட்டாபிராம் (வெளிவட்டச் சாலை) வரை 19 புதிய மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமையவிருக்கும் இந்த நீட்டிப்பு திட்டத்திற்காக ரூ. 9,744 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தின் மொத்த நீளம் 21.76 கி.மீ. ஆக இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் ஓடி, ஆவடி இரயில் நிலையம், ஆவடி பேருந்து முனையம், சென்னை வெளிவட்டச் சாலை போன்ற போக்குவரத்து மையங்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்கும் வகையில் இந்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

திட்ட செலவு மற்றும் இதை செயல்படுத்தும் நேரத்தை மேம்படுத்துவதற்காக மூன்று இடங்களில் (அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து பணிமனை சந்திப்பு, டன்லப், ஆவடி பேருந்து நிலையம்) இந்த மெட்ரோ வழித்தடம் நெடுஞ்சாலை மேம்பாலத்துடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in