
சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் வகையிலான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, அரசு கூடுதல் தலைமை செயலாளரிடம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 1-ல் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ இரயிலை சாலை மேம்பாலத்துடன் இணைத்து நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே. கோபாலிடம் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தால் சமர்ப்பிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் தொடங்கி பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் வரை 13 புதிய மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமையவிருக்கும் இந்த நீட்டிப்பு திட்டத்திற்காக ரூ. 9,335 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தின் மொத்த நீளம் 15.46 கி.மீ. ஆக இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை வெளிவட்டச் சாலையுடன் மெட்ரோ வழித்தடத்தை இணைப்பதற்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வுப்பாதைகள் அமைக்கும் பணிக்கான திட்டங்கள் இதில் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த மேம்பாலச் சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தடையற்ற சாலை போக்குவரத்து மற்றும் மெட்ரோ இணைப்பை வழங்குவதற்கு இந்த திட்டம் வழிவகை செய்யும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.