
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயத்தை அருந்திய 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அதில் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பேசு பொருளானது. இந்த விஷச்சாராய விவகாரம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 18 பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டது.
இந்நிலையில் குண்டர் சட்டத்தில் தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து, இந்த 18 பேர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வுக்கு முன்னிலையில் இன்று (ஜன.6) விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், காலதாமதமாக அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறி அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து வாதிட்டனர்.
தமிழக அரசு சார்பில் இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், கள்ளச்சாராயத்தால் 60-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட அசாதாரண சூழ்நிலையால் அவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாகக் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், `மதுவிலக்குக் காவலர்கள் பதிவு செய்யும் வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை புனையப்பட்ட வழக்குகள். முதன்மைக் குற்றவாளிகள் காவல்துறையினரால் கைது செய்யப்படுவதில்லை’ என்றனர்.
இதைத் தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 18 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டனர்.